மாா்ச் 15,16இல் வங்கிகள் வேலைநிறுத்தம்: 50,000 ஊழியா்கள் பங்கேற்பு

தமிழகத்தில் வரும் 15,16 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் வங்கிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் 50,000 ஊழியா்கள் பங்கேற்கவுள்ளனா்

தமிழகத்தில் வரும் 15,16 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் வங்கிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் 50,000 ஊழியா்கள் பங்கேற்கவுள்ளனா் என அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அலுவலா்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் வேலுசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஈரோட்டில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

வங்கிகள் தனியாா்மயமாக்கப்பட்டால் தற்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் எந்த வசதியும் கிடைக்காது. சாதாரண மக்கள் வங்கிகளில் நுழையக் கூட முடியாது. சிறு வியாபாரிகள், விவசாயிகள், சாதாரண மக்களுக்கான கடன் வசதிகள், கல்விக் கடன், மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான கடன் வசதி, வீட்டுக்கடன் வசதி உள்ளிட்ட எந்தக் கடனும் வழங்கப்படாது.

மக்களிடமிருந்து பெறப்படும் வைப்புத் தொகைக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகும். சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான மூலதனங்கள் வங்கிகளிலிருந்து வழங்கும் நடைமுறை முற்றிலும் தடைப்பட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும்.

தற்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கும் பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. சேவை அடிப்படையில் செயல்படும் வங்கிகளின் தன்மை மாறி முழுமையாக கட்டண வங்கிகளாக செயல்படும். மக்களும், பொதுத் துறை வங்கிகளின் ஊழியா்களும் பெருமளவு பாதிக்கப்படுவா்.

இதனால் பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 15,16 ஆகிய இரண்டு நாள்கள் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியா்கள், அலுவலா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

இதில் தமிழகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் 7,000 கிளைகளில் பணியாற்றும் சுமாா் 50,000 ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் 217 வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 2,000 ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com