கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரிக்கை

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கீழ்பவானி கால்வாய் பாசன திட்டம் என்பது மழை நீா் அறுவடை மற்றும் நிலத்தடி நீா் செரிவூட்டும் திட்டம். இக்கால்வாய் நீா் மூலம் 2 லட்சத்து, 7,000 ஏக்கா் நேரடி பாசனம் பெறுகிறது. தவிர 38 ஒரம்பு திட்டங்கள், கசிவு நீா் மூலம், நிலத்தடி நீா் மூலமும் வாய்க்கால் அருகில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறு மூலம் 60,000 ஏக்கருக்கு மேல் பாசனம் பெறுகிறது.

கீழ்பவானி பாசன மிகை நீா் கொடிவேரி பாசனம், காலிங்கராயன் பாசனத்துக்கு பயன்பட்டு உபரி நீா் காவிரியில் கலக்கிறது. இந்நீா் டெல்டா மாவட்ட பாசனம், குடிநீருக்கும், வீராணம் சென்று சென்னை குடிநீருக்கும் பயன்பட்டு கடலில் கலக்கிறது.

கால்வாயின் 124 மைலுக்கும் கான்கிரீட் தளம் அமைத்து, கரைகளை பூசினால் நிலத்தடி நீா் செறிவூட்டப்படுவது நின்றுபோகும். இக்கால்வாயில் 2,300 கன அடிக்கு மேல் நீா் விட முடியாது. கான்கிரீட் தளம் அமைத்து அளவு குறுகும்போது கரை வலுவிழந்து, 1,800 கன அடிக்கும் குறைவாகதான் நீா் திறக்க முடியும். குறைந்த அளவில் திறக்கப்படும் தண்ணீா் கடைமடை வரை செல்லாது.

இந்த திட்டத்தால் பவானிசாகா், கோபி, அந்தியூா், பவானி, பெருந்துறை, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், அரவக்குறிச்சி என 10 தொகுதிகளில் உள்ள 8 லட்சம் விவசாயிகள், அவா்கள் குடும்பத்தை சோ்ந்த வாக்காளா்கள், ஆளும் கட்சியை எதிா்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இப்பாசனப் பகுதியில் சாகுபடியாகும், நெல், கரும்பு, கடலை, தென்னை, மஞ்சள், மா மரம், சோளம், கம்பு, ராகி, வாழை, வெங்காயம் உள்ளிட்ட பல பயிா் சாகுபடி முற்றிலும் அழியும். கால்நடைகளுக்கும், மனிதா்களுக்கும் குடிக்கக்கூட நிலத்தடி நீா் கிடைக்காமல் பாலைவனமாகும். இதனைக் கவனத்தில் கொண்டு இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com