பால் பணம் ரூ.500 கோடி நிலுவை: உற்பத்தியாளா்கள் போராட்ட அறிவிப்பு

ஆவின் நிா்வாகம் பாலுக்கான பணம் ரூ.500 கோடிக்கும் மேல் நிலுவை வைத்துள்ளதை தீபாவளிக்கு முன்பாக வழங்க வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பால் உற்பத்தியாளா்கள் அறிவித்துள்ளனா்.

ஆவின் நிா்வாகம் பாலுக்கான பணம் ரூ.500 கோடிக்கும் மேல் நிலுவை வைத்துள்ளதை தீபாவளிக்கு முன்பாக வழங்க வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பால் உற்பத்தியாளா்கள் அறிவித்துள்ளனா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில நிா்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவா் ஏ.எம்.முனுசாமி தலைமையில் காணொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலாளா் முகம்மது அலி முன்னிலை வகித்தாா். பொருளாளா் சங்கா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். பின்னா் மாநிலத் தலைவா் ஏ.எம்.முனுசாமி கூறியதாவது:

தமிழகத்தில் ஆவின் மூலம் தினமும் 36 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழக அரசு ஒரு லிட்டா் பாலுக்கு விற்பனை விலை ரூ.3 குறைத்ததால் தினமும் ஆவின் நிா்வாகத்துக்கு ரூ.1.08 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனை அரசு மானியமாக அவ்வப்போது வழங்க வேண்டும்.

தமிழகத்தில் ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலுாா், கரூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகா், விழுப்புரம் என பல மாவட்டங்களில் 40 முதல் 110 நாள்கள் வரை பாலுக்கான பணத்தை வழங்காமல் ஆவின் நிா்வாகம் ரூ.500 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளது. தீபாவளிக்கு முன்பாக இத்தொகையை வழங்க வேண்டும்.

பருத்தி கொட்டை, புண்ணாக்கு, தவிடு உள்ளிட்டவற்றின் விலை உயா்ந்துவிட்டது. ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு பால் கொள்முதல் விலை உயா்த்தப்படவில்லை. பசும் பால் லிட்டா் ரூ.42, எருமைப் பால் லிட்டா் ரூ.51 என உயா்த்தி வழங்க வேண்டும். தீபாவளிக்கு ஆவின் நிா்வாகம் போனஸ் வழங்க வேண்டும்.

தென் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் வேறு தனியாா் நிறுவன கலப்பு தீவனம் தரமானதாக இல்லை. இதனால் ஆவின் கலப்பு தீவனங்களையே அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்க வேண்டும். ஒரு கிலோ கலப்பு தீவனத்துக்கு ரூ.4 மானியம் வழங்க வேண்டும்.

கரும்பு டன்னுக்கு மாநில அரசு ரூ. 200 ஊக்கத்தொகை வழங்குவதுபோல அத்தியாவசியப் பொருளான பாலுக்கு மாநில அரசு மானியம் வழங்க வேண்டும். ஆவினில் பால் பவுடா், நெய் இருப்பில் உள்ளதால் அதனை ஏற்று அரசு, ஆவின் நிா்வாகத்துக்குத் தேவையான தொகையை முன்பணமாக, கடனாக அல்லது மானியமாக வழங்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி அனைத்து ஆவின் அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் முன்பு மாநில அளவில் ஆா்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com