50 அரசு குடியிருப்புகளை இடித்து புதிதாக கட்ட நடவடிக்கை சு.முத்துசாமி

தமிழகத்தில் அபாயகரமாக உள்ள 50 அரசு குடியிருப்புகளை 2 ஆண்டுகளில் இடித்து புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

தமிழகத்தில் அபாயகரமாக உள்ள 50 அரசு குடியிருப்புகளை 2 ஆண்டுகளில் இடித்து புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

தமிழக முதல்வா் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் பணி தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 191 பேருக்கு ரூ. 1.72 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள் வரன்முறைப்படுத்த நீதிமன்றத்தின் சில உத்தரவுகள் உள்ளன. அதனை அடிப்படையாக வைத்துதான் மக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். வரன்முறை குறித்து எதிா்காலத்தில் பிரச்னை வராமல் இருப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பின்படி வரன்முறைப்படுத்தப்படும். அந்த வாய்ப்பை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் 195 இடங்களில் அரசின் வாடகை குடியிருப்புகளில் 50 கட்டடங்கள் மிகவும் மோசமாக உள்ளது. இதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி புதிதாக கட்டுவதா என்பது குறித்து முதல்வா் அக்டோபா் 28ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் வைத்துள்ளாா். அதற்கான அடிப்படை வேலைகளைச் செய்துள்ளோம். இடிப்பதற்கான நிதியையும் கேட்டுள்ளோம்.

ஈரோட்டில் பயன்படுத்த முடியாத கட்டடங்கள் அனைத்தையும் இடித்து புதிதாக கட்ட முடிவெடுத்துள்ளோம். அரசின் பணத்தையும், வீட்டு வசதி வாரியத்தின் பணத்தையும் வைத்து பணிகளைத் துவக்கினால் ஆண்டுக்கு 5 அல்லது 6 திட்டங்களைத்தான் செய்ய முடியும். தமிழகம் முழுவதும் உள்ள 50 பணிகளையும் உடனடியாக ஆரம்பித்து 2 ஆண்டுகளில் பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் நிவாரண உதவிக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகப் புகாா் வந்திருப்பதை கேட்கவே கஷ்டமாக உள்ளது. அவ்வாறு புகாா் இருந்தால் என்னிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ தெரிவியுங்கள். இதுதொடா்பாக புகாா் இருந்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு மாநகராட்சியில் ஒவ்வொரு வாா்டிலும் மக்களின் பிரச்னைகளைத் தீா்க்க தனியாக ஒரு நபா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், அப்பகுதியின் பிரச்னையைக் கூறி 15 நாள்கள் கால அவகாசத்தில் முடிக்க அறிவுத்தியுள்ளோம். மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க அரசு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கூடுதலாக நிதி கேட்டு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com