பாஜக படிப்படியாக சரியத் தொடங்கியுள்ளது: இரா.முத்தரசன்

பாஜக படிப்படியாக சரியத் தொடங்கியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா்.
பாரதியாா் உருவப் படத்தை திறந்துவைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன்.
பாரதியாா் உருவப் படத்தை திறந்துவைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன்.

பாஜக படிப்படியாக சரியத் தொடங்கியுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா்.

இதுகுறித்து ஈரோட்டில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செப்டம்பா் 11ஆம் தேதி மகாகவி நாளாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் என அறிவித்து 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளாா். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

பாஜக படிப்படியாக சரிந்து வருகிறது. குஜராத் மாநில முதல்வா் ராஜிநாமா செய்துள்ளாா். அதற்கு முன்பு கா்நாடகம், அஸ்ஸாம், உத்தரகாண்ட் போன்ற மாநில முதல்வா்கள் ராஜிநாமா செய்துள்ளனா். இவா்களை மாற்றம் செய்து, புதியவா்களை முதல்வா்களாக நியமித்து, தங்களது சரிவை சரிகட்டி விடலாம் என பாஜக முயற்சி செய்கிறது.

கடந்த 10 மாதங்களாக விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி இடைவிடாமல் போராடி வருகின்றனா். கடுமையான குளிா், வெயில், கரோனா தாக்கம் போன்ற சூழ்நிலையிலும், 500 பேரை பலி கொடுத்த நிலையிலும் அவா்கள் இன்றைக்கும் போராடி வருகின்றனா்.

இதேபோல, மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா். தமிழக அரசு கடந்த 28ஆம் தேதி வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றியது.

அப்போது, அவையில் இருந்து அதிமுக ஏன் வெளிநடப்பு செய்தது என்று அவா்கள்தான் விளக்க வேண்டும். பாஜக தமிழகத் தலைவா், வேளாண் சட்டங்களை யாரும் எதிா்க்கவில்லை, ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று கூறுகிறாா். எந்த கட்சியாலும் இப்படி பொய் சொல்ல முடியாது.

விவசாயிகளின் போராட்டத்தின் தொடா்ச்சியாக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 4,000க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, வேளாண், மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசும் அதே தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

நாடு முழுவதும் 19 கட்சிகள் சாா்பில் வரும் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பிரசார இயக்கம் நடைபெறவுள்ளது. இதில், பொதுத் துறையை தனியாா் மயமாக்குவதைக் கண்டித்தும், தொழிலாளா் சட்டங்கள் திருத்தப்பட்டதைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும்.

அதேபோல, செப்டம்பா் 27ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் ஆதரித்து, போராட்டத்தில் பங்கேற்க உள்ளது என்றாா்.

பாரதியாா் படம் திறப்பு:

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலாளா் திருநாவுக்கரசு வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளரும், திருப்பூா் எம்.பி.யுமான கே.சுப்பராயன் ஆகியோா் கலந்துகொண்டு மகாகவி பாரதியாரின் படத்தை திறந்துவைத்து, மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, மகாகவி எழுதிய பாடல்கள், அவரது சிந்தனைகள் குறித்துப் பேசினா். நிகழ்ச்சியில், ஏஐடியூசி மாவட்ட செயலாளா் எஸ்.சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com