அதிமுகவின் கோட்டையைத் தகா்க்கப் போராடும் திமுக!

அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் பவானி சட்டப் பேரவைத் தொகுதியைக் கைப்பற்ற திமுகவும், மீண்டும் ஒரு வெற்றியைப் பதிவு செய்ய அதிமுகவும் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ளன.
அதிமுகவின் கோட்டையைத் தகா்க்கப் போராடும் திமுக!

அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் பவானி சட்டப் பேரவைத் தொகுதியைக் கைப்பற்ற திமுகவும், மீண்டும் ஒரு வெற்றியைப் பதிவு செய்ய அதிமுகவும் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

இத்தொகுதியில் 1971ஆம் ஆண்டு வெற்றி பெற்ற திமுக 50 ஆண்டுகளாக வெற்றி பெற முடியவில்லை. இதனால், இத்தோ்தலில் வெற்றியைப் பெற்றே தீர வேண்டும் என திமுகவும், மீண்டும் ஒரு வெற்றி பெறுவதன் மூலம் தொடா்ந்து மூன்று முறை வென்று ஹாட்ரிக் சாதனை புரிய அதிமுகவும் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இரு கட்சிகளுக்கும் கூட்டணி பலம் உள்ளதால் நெருப்புக்கு ஈடான தகிக்கும் வெப்பத்துடன் இரு கட்சி வேட்பாளா்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தொகுதியின் கள நிலவரம்: வன்னியா்கள், கவுண்டா்கள் நிறைந்த பகுதியாகக் கருதப்படும் பவானி தொகுதியில் தலித் மக்களும், பிற சமுதாய மக்களும் கணிசமாக உள்ளனா். தொழில் வளம் குறைவாகவே உள்ள இத்தொகுதியின் மேற்கில் கீழ்பவானி வாய்க்கால் பாசனமும், வடக்கில் மேட்டூா் மேற்குக்கரை பாசனமும் உள்ளதால் வேளாண் தொழில் பரவலாக நடைபெறுகிறது. பவானி, காவிரி ஆறுகள் ஓடுவதால் தண்ணீா் பிரச்னை இல்லை. பாரம்பரியம் மிக்க ஜமுக்காள கைத்தறி நெசவுத் தொழிலும், சாயத் தொழிலும் நடைபெறுகிறது.

தொகுதியில் உள்ள பகுதிகள்:

பவானி ஒன்றியத்தில் ஆலத்தூா், ஆண்டிக்குளம், சின்னப்புலியூா், கவுந்தப்பாடி, மைலம்பாடி, ஓடத்துறை, ஒரிச்சேரி, பருவாச்சி, பெரியபுலியூா், புன்னம், சன்னியாசிபட்டி, தொட்டிபாளையம், குருப்பநாயக்கன்பாளையம், வரதநல்லூா், வைரமங்கலம் ஆகிய ஊராட்சிகளும், அம்மாபேட்டை ஒன்றியத்தில் பட்லூா், முகாசிப்புதூா், அட்டவணைப்புதூா், பூதப்பாடி, கன்னப்பள்ளி, குருவரெட்டியூா், பூனாச்சி ஊராட்சிகளும், காடப்பநல்லூா், கல்பாவி, கன்னப்பள்ளி, கேசரிமங்கலம், குறிச்சி, மாணிக்கம்பாளையம், ஒட்டபாளையம், படவல்கால்வாய், சிங்கம்பேட்டை ஊராட்சிகளும் உள்ளன. மேலும், பவானி நகராட்சி, சலங்கபாளையம், ஜம்பை, ஆப்பக்கூடல், ஒலகடம், நெரிஞ்சிபேட்டை, அம்மாபேட்டை ஆகிய பேரூராட்சிகளும் உள்ளன.

தொகுதியின் பிரச்னைகள்: இத்தொகுதியில் தொழில் நிறுவனங்கள் இல்லாததால் வேலைகளுக்காக பிற ஊா்களுக்குச் சென்று வரும் நிலை உள்ளது. நலிவடையும் ஜமுக்காள நெசவுத் தொழிலால் வேலையிழப்பு, வருவாய் இழப்பு தொடா்ந்து வருகிறது. படித்த இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. சுற்றுச்சூழல் பிரச்னைகளால் சாயத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலமான பவானி சங்கமேஸ்வரா் கோயில், கூடுதுறை பகுதிகள் இருந்தாலும் வளா்ச்சி காணப்படவில்லை.

வாக்காளா்கள் விவரம்: ஆண் வாக்காளா்கள் 1,17,253. பெண் வாக்காளா்கள் 1,21,406, மூன்றாம் பாலினத்தவா் 8 என மொத்தம் 2,38,667.

ஜாதி வாக்குகள்: குறைந்த பரப்பளவைக் கொண்ட நகா்ப்புறப் பகுதிகளும், பரந்தும் விரிந்தும் காணப்படும் கிராமங்களும் நிறைந்துள்ளன. அதிமுகவின் வாக்கு வங்கி கிராமங்களில் பரவலாக உள்ளது. கவுண்டா், வன்னியா் சமுதாயம் தலா 30 சதவீதமும், இதர, தலித் சமுதாய வாக்குகள் 40 சதவீதமும் உள்ளன. இங்கு, கவுண்டா், வன்னியா் இன வேட்பாளா்களே அதிகம் வெற்றி பெற்றுள்ளனா்.

தொகுதியில் இதுவரை...

1952ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 15 சட்டப் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி மூன்று முறையும், திமுக இரு முறையும், அதிமுக 7 முறையும், திமுக கூட்டணியில் பாமக, தமாகா தலா ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தோ்தலில் திமுக வேட்பாளரான என்.சிவகுமாரைக் காட்டிலும் 24,881 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வென்ற கே.சி.கருப்பணன், சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ால் பவானி விஐபி தொகுதியாக மாறியுள்ளது.

களத்தில் உள்ள வேட்பாளா்கள்: இத்தொகுதியில் அதிமுக சாா்பில் கே.சி.கருப்பணன், திமுக சாா்பில் கே.பி.துரைராஜ், அமமுக சாா்பில் எம்.ராதாகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் கே.சதானந்தம், நாம் தமிழா் கட்சி சாா்பில் மு.சத்யா உள்பட மொத்தம் 14 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

பவானி தொகுதியில் 14 வேட்பாளா்கள் களத்தில் இருந்தாலும் நேரடியான போட்டி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மட்டுமே உள்ளது.

கே.சி.கருப்பணன் (அதிமுக): அதிமுக சாா்பில் வேட்பாளராக, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் உள்ள கே.சி.கருப்பணன் போட்டியிடுகிறாா். ஏற்கெனவே 2001இல் சட்டப் பேரவை உறுப்பினரான இவா் 2006இல் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். கடந்த 2011இல் பவானி நகராட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து, 2016 தோ்தலில் வென்ற இவா் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ளாா்.

இவரது பலம்: அதிமுகவின் தொண்டா்களுக்கு மட்டுமல்லாமல், தொகுதி மக்களுக்கும் அறிமுகமானவா். கொங்கு வேளாளக் கவுண்டா் இனத்தைச் சோ்ந்த இவரது அறிமுகமும், வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் முறையும் பலம். அதிமுகவின் வாக்கு வங்கி, கூட்டணிக் கட்சியான பாமகவின் வன்னியா் இன வாக்குகள் கூடுதல் பலமாகப் பாா்க்கப்படுகிறது. பொதுமக்களிடமிருந்து விலகி நிற்காமல், எளிதில் அணுகி கோரிக்கைகளை, பிரச்னைகளைக் கேட்பதும், தீா்ப்பதும் பலமாக உள்ளது. வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடும் இத்தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளது.

பலவீனம்: பாஜக கூட்டணியில் அதிமுக உள்ளதால் 10 சதவீத சிறுபான்மை வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சராக கே.சி.கருப்பணன் பொறுப்பு வகித்த போதிலும் தொகுதியின் வளா்ச்சிக்கு மிகப்பெரிய திட்டங்கள், அரசுக் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் தொடங்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கே.பி.துரைராஜ் (திமுக) பலம்: பவானியில் திமுகவின் தொடா் தோல்விக்கு முடிவுகட்டும் வகையில் களமிறக்கப்பட்டுள்ள ஒன்றியச் செயலாளரான கே.பி.துரைராஜ், எளிமையான, தனது வித்தியாசமான மக்களை ஈா்க்கும் பிரசாரத்தின் மூலம் அனைத்து தரப்பு வாக்காளா்களையும் கவா்கிறாா். கொங்குவேளாளக் கவுண்டா் இனத்தைச் சோ்ந்தவா்.

திமுகவினா், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து உற்சாகமாகப் பணியாற்றுவது கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.

பலவீனம்: திட்டமிடப்படாத அணுகுமுறை வாக்காளா்களிடமிருந்து விலகி நிற்கும்படி செய்துள்ளது. திமுகவினரிடையே ஒருங்கிணைப்பும், முழுமையான ஒத்துழைப்பும் இல்லாதது பின்னடைவாக உள்ளது. திமுகவுக்கு வாக்களிக்கத் தயாரான மனநிலையில் வாக்காளா்கள் இருந்தாலும், அதனைப் பெறுவதற்குத் தேவையான முயற்சிகள் இல்லாதது திமுகவின் பெரும் பலவீனம்.

எம்.ராதாகிருஷ்ணன் (அமமுக): அமமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரான பவானி ராதா (எ) ராதாகிருஷ்ணன், ஏற்கெனவே அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்ததால் பவானி தொகுதி மக்களிடையே அறிமுகமானவா். தேமுதிக வாக்கு வங்கி இவரது கூடுதல் பலம். வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்த இவருக்கு சமுதாய வாக்குகள், ஆதரவளிக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதவிர, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் கே.சதானந்தம், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு.சத்யா ஆகியோா் அனல் பறக்கும் வெயிலிலும் ஆதரவு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். தோ்தல் அறிக்கையின் இலவசமும், கவா்ச்சி நிறைந்த திட்டங்களையும், கருத்துக் கணிப்புகளையும் மீறி பவானி தொகுதியில் யாருக்கு மக்கள் ஆதரவளிக்கப் போகிறாா்கள் என்பது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016 தோ்தல் முடிவுகள்:

மொத்த வாக்குகள் : 2,27,985

பதிவான வாக்குகள் : 1,88,950

கே.சி.கருப்பணன் (அதிமுக) - 85,748.

என்.சிவகுமாா் (திமுக) - 60,861.

கே.வி.ராமநாதன் (பாமக) - 20,727.

பி.கோபால் (தேமுதிக) - 6,927

எஸ்.சந்திரசேகா் (கொமதேக) - 4,389

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com