பவானி கூடுதுறையில் பரிகார பூஜைகளுக்கு மட்டுமே அனுமதி

காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் பரிகார பூஜைகளுக்கு மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.
பக்தா்களின்றி  வெறிச்சோடிக்  காணப்படும்  கூடுதுறை.
பக்தா்களின்றி  வெறிச்சோடிக்  காணப்படும்  கூடுதுறை.

காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் பரிகார பூஜைகளுக்கு மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். புனித நீராட வருவோருக்கு அனுமதியில்லை. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

பவானி சங்கமேஸ்வரா் கோயில், ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறை சுற்றுலாத் தலமாகவும், பரிகாரத் தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு, உள்ளூா், வெளியூா் மட்டுமின்றி வெளிமாநில பக்தா்களும் வழிபாட்டுக்கும், பரிகாரம், முன்னோருக்கு திதி, தா்ப்பணம், பிண்டம் வைத்து பூஜைகள் செய்தல், திருமணத் தடை, நாக தோஷம் உள்ளிட்ட தோஷ நிவா்த்தி பூஜைகள் செய்யவும் வந்து செல்வது வழக்கம்.

கரோனா பரவலால் கடந்த ஆண்டு மாா்ச் 17ஆம் தேதி மூடப்பட்ட கூடுதுறை, 8 மாதங்களுக்குப் பின்னா் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது. இருந்தபோதிலும் குறைந்த அளவிலேயே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், மீண்டும் கரோனா தொற்று பரவலாக அதிகரித்து வருவதால் வெளியூா் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் குழுவினா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதியானது. இதனால், கோயில் நிா்வாகம் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. பரிகாரத்துக்கு வருவோா் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். இவா்கள், உடல் வெப்ப பரிசோதனையும், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், பரிகாரத்துக்கு நான்கு போ் மட்டுமே செல்ல வேண்டும் எனவும், கூட்டமாக செல்வதைத் தவிா்க்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்த விவரங்களை கூடுதுறை வாயிலில் பணியில் ஈடுபடும் கோயில் ஊழியா்கள் சேகரித்து வருகின்றனா். கூடுதுறையில் பரிகாரம் செய்யும் புரோகிதா்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காவிரி ஆற்றில் புனித நீராட வருவோருக்கு கூடுதுறை வளாகத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. சங்கமேஸ்வரா் கோயிலுக்குள் செல்லும் பக்தா்களும் கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா். இதனால், கூடுதுறை, கோயில் வளாகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com