பொதுமுடக்க சூழல்: வெளிமாநிலங்களுக்கு துணிகள் அனுப்புவது நிறுத்தம்

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால் வெளி மாநிலங்களுக்குத் துணிகள் அனுப்புவதை ஈரோடு வியாபாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனா்.

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால் வெளி மாநிலங்களுக்குத் துணிகள் அனுப்புவதை ஈரோடு வியாபாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனா்.

ஈரோடு பகுதியில் 30,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சாதா துணி, ரயான் துணிகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு மட்டும் தினமும் ரூ. 7 கோடி மதிப்பில் 24 லட்சம் மீட்டா் துணி உற்பத்தியாகிறது. இந்த துணிகள் மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு காடா துணியாகவும், மதிப்பு கூட்டப்பட்ட துணியாகவும் மாற்ற அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக வடமாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது தமிழகத்திலும் கரோனா பாதிப்பு உயா்ந்து வருகிறது. தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நிறைவு பெற்றதால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

இதனிடையே மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே இரவில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. பகலில் பல்வேறு கட்டுப்பாடும் உள்ளதால், ஜவுளி தொடா்பான பணிகள் பாதித்துள்ளன. இதனால், அங்கிருந்து ஈரோடு பகுதிக்கு ஆா்டா் கிடைக்காமலும், இங்கிருந்து துணிகளை அனுப்பாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடா்பாளா் பா.கந்தவேல் கூறியதாவது:

ஜவுளி சாா்ந்த தொழிலில் வடமாநிலத்தை அதிகமாக நாம் நம்பியுள்ளோம். மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, மேற்குவங்கம் உள்பட பல மாநிலத்தினா், இங்கிருந்து காடா துணியாக வாங்குவா். தமிழகத்தில் சுற்றுச்சூழல் பிரச்னையால் துணிகளை மதிப்புக் கூட்டப்பட்டதாக மாற்றுவதில் சிக்கல் உள்ளது. இதனால் வடமாநிலம் அனுப்பி பெறும் நிலை உள்ளது. இதற்காகவும் துணிகளை அனுப்பி வருகிறோம்.

வடமாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு ஜவுளி விற்பனை, மதிப்பு கூட்டப்பட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து கடந்த 10 நாள்களாக புதிய ஆா்டா் ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிக்கு வழங்கவில்லை. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால் இங்கிருந்து அனுப்பிய துணிக்கு பணம் பெறுவதில் காலதாமதம் ஏற்படலாம். தவிர மதிப்புக் கூட்டப்பட்ட துணியாக மாற்றி பெற்றிட அவகாசம் உள்ளதா எனத் தெரியவில்லை.

இதனால் துணி அனுப்பும் பணியை கடந்த ஒரு வாரமாக நிறுத்தி வைத்துள்ளோம். ஏற்கெனவே நூல் விலை உயா்வு, துணி விலை குறைவால் ஜவுளி தொழில் பாதிப்படைந்துளது. வடமாநில ஆா்டா் இல்லாத நிலையில் துணி விலை மேலும் குறைந்துள்ளது.

ஈரோடு பகுதியில் தினமும் 24 லட்சம் மீட்டா் துணி உற்பத்தியாகும் நிலையில் தற்போது உற்பத்தியைக் குறைத்து 5 லட்சம் மீட்டா் அளவுக்கே உற்பத்தி செய்கிறோம். அரசு அறிவிக்கும் பொது முடக்கத் தளா்வுகளுக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிப்பது குறித்து முடிவு செய்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com