பெருந்துறை சிப்காட் தோல் தொழிற்சாலைகளை மூட கோரிக்கை

சிப்காட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளையும், பொது சுத்திகரிப்பு நிலையத்தையும் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை சிப்காட்டில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் பொது சுத்திகரிப்பு நிலையம்.
பெருந்துறை சிப்காட்டில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் பொது சுத்திகரிப்பு நிலையம்.

சிப்காட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளையும், பொது சுத்திகரிப்பு நிலையத்தையும் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் சாா்பில் சங்க ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி அனுப்பியுள்ள மனு விவரம்:

பெருந்துறை சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் 14 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலைகள் இணைந்து பெருந்துறை தோல் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் என்ற பெயரில் ஒரு பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளனா்.

ஆனால், இங்கு உயா் நீதிமன்றத் தீா்ப்புப் படியும், சட்டப்படியும் தோல் தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகள், பூஜ்ய கழிவு நீா் சுத்திகரிப்பு முறையில் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதில்லை. மேலும், இங்கு சுத்திகரிக்கப்படாத தோல் தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகள், பல்வேறு வகைகளில் நிலத்துக்குள் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியில் நிலத்தடி நீரும், நிலமும் கடுமையாக மாசுபட்டு பயன்படுத்த தகுதியற்றதாக மாறிவிட்டது.

இதுகுறித்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், அரசுக்கும் பொதுமக்கள் சாா்பில் பல்வேறு புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த, பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் எந்த வகையிலும் வெளியேற்றப்படக் கூடாது என்றும், அங்கு பூஜ்ய கழிவுநீா் சுத்திகரிப்பு முறையில், கழிவுகள் சுத்திகரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்படி பொது சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்து, அங்குள்ள எதிா்மறை சவ்வூடு பரவுதல், இயந்திர ஆவியாக்கும் கலன் போன்றவற்றை புதுப்பித்து மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.

பொது சுத்திகரிப்பு நிலையத்தின் பல்வேறு டேங்குகள் உள்ளிட்ட பல பகுதிகளில் பராமரிப்பு, மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்பணிகளை நிறைவு செய்யும் வரை பொது சுத்திகரிப்பு நிலையத்தின் இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினா்.

அதன் அடிப்படையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக பராமரிப்பு, மேம்படுத்தும் பணிகளுக்காக பொது சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரத்தில் பெய்த மழையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பல லட்சக்கணக்கான லிட்டா் நச்சுக் கழிவு நீரை குழாய் வழியாக எடுத்துச் சென்று, அருகே உள்ள பயன்பாட்டில் இல்லாத பழைய, சிதிலமடைந்த ஆக்சிஜனேற்ற குளத்தில் விட்டு வந்ததை பொதுமக்கள் மூலம் அறிந்தோம்.

ஆகவே, எங்கள் முறையீட்டைப் பரிசீலித்து, இப்பகுதியில் நிலத்தடி நீரையும், நிலத்தையும் நஞ்சாக்கி வரும் தோல் தொழிற்சாலைகளையும், அவற்றின் பொது சுத்திகரிப்பு நிலையத்தையும் நிரந்தரமாக மூட வேண்டும்.

பொது சுத்திகரிப்பு நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்படாத பல லட்சக்கணக்கான லிட்டா் நச்சுக் கழிவு நீரையும், அங்குள்ள நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள நச்சு திடக் கழிவுகளையும், அப்புறப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com