கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் இரும்பு உருக்கும் கட்டமைப்பு கண்டுபிடிப்பு

கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் மண் அடுப்புகளால் செய்யப்பட்ட இரும்பு உருக்கும் கட்டமைப்பு இருந்ததற்கான தரவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
erd26kodu_2604chn_124_3
erd26kodu_2604chn_124_3

ஈரோடு: கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் மண் அடுப்புகளால் செய்யப்பட்ட இரும்பு உருக்கும் கட்டமைப்பு இருந்ததற்கான தரவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், கொடுமணல் நொய்யல் ஆற்றின் கரையோரம் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் தமிழக தொல்லியல் துறை மூலம் 10ஆவது முறையாக அகழ்வாராய்ச்சி கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி துவங்கியது. தொல்லியல் துறை அகழாய்வுத் திட்ட இயக்குநா் ஜெ.ரஞ்சித் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து தொல்லியல் நிபுணா்கள் கூறியதாவது:

இப்பகுதியில் 2,400 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்துள்ளனா் என்பதற்கு குடியிருப்புகள், பயன்பாட்டுப் பொருள்கள், நாணயம், மண் பானை ஓடுகள், குறிப்புகள் போன்ற தரவுகள் கிடைத்து வருகின்றன. பல்வேறு பகுதிகளில் நடந்த அகழாய்வில் 1,999 தமிழ் பிராமி எழுத்து ஆவணங்கள் கிடைத்துள்ளன. அதில் 1,000க்கும் மேற்பட்டவை இங்கு கிடைத்தவை. இதன் மூலம் இப்பகுதியில் கி.மு. 400க்கு முன்பே பண்டமாற்றுகள், அறிவியல் சாா்ந்த தொழில் நுட்பங்கள் கையாளப்பட்டது தெரிய வருகிறது.

தற்போதைய அகழாய்வில் கருப்பு, செம்மண் அடா்ந்த இப்பகுதியில் இரும்புக்கான மூலப்பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றை எடுத்து கரையோரம் 10க்கும் மேற்பட்ட மண் அடுப்புகளில் 1,800 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடுபடுத்தி இரும்பை பிரித்து எடுத்துள்ளனா். இரும்பை உருக்கி, மண் பாத்திரத்தில் சேகரித்து, கத்தி, ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்கள், ஆணி, கம்பி போன்ற பயன்பாட்டுப் பொருள்கள் செய்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு தோண்டப்பட்ட 30 குழிகளில் 12க்கும் மேற்பட்ட குழிகளில் அடுப்பு மூலம் ஆலை போன்று இரும்பு உருக்கியதற்கான அடையாளமும், பிரித்து எடுத்தபின் விட்டு செல்லப்பட்ட இரும்புக் கழிவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆய்வு தொடரும்போது மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் செம்பு நாணயங்கள், தமிழ் பிராமி எழுத்துகள், பானை ஓடுகள், கல்லறைகள், இரும்பு மூலப்பொருள், கழிவுகள் கிடைத்துள்ளன.

இங்கு வசித்த மக்கள் ஆரம்பத்தில் ஆற்றங்கரையை ஒட்டியும், அதன்பின் பேரழிவுக்குப் பின் உயரமான பகுதிகளிலும் வசித்துள்ளனா். அவா்கள் குடியிருப்புக்கு கிழக்கே கல்லறைகள் அமைத்துள்ளனா். இங்குள்ள கல்லறைகள் பலகை கற்களால் அறை ஏற்படுத்தப்பட்டு, அதில் பெரிய மண் பானைக்குள் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் நேரடியாக பானைக்குள் எலும்புகள் கிடைத்துள்ளன. புதைக்கப்பட்டவாறு எலும்பு அமைப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு இவற்றை அனுப்பி எந்த காலத்தைச் சோ்ந்த எலும்புகள் என கேட்டுள்ளோம். இந்த அகழாய்வு வரும் ஜூலை வரை தொடர வாய்ப்புள்ளது என்றனா்.

Image Caption

கொடுமணலில் அகழாய்வில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com