பொதுப் பணித் துறை அலுவலகத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் போராட்டம்

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிக்கான திட்ட வரைவை வழங்க மறுப்பதுடன், ஒரு தரப்பு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிக்கான திட்ட வரைவை வழங்க மறுப்பதுடன், ஒரு தரப்பு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, கரூா், திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக 2.07 லட்சம் ஏக்கா் கசிவு நீா் மூலம் 40,000 ஏக்கா், நிலத்தடி நீா், கிணறு, ஆழ்துளைக் கிணறு மூலம் மேலும் பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. தவிர மனிதா்கள், கால்நடை, மரங்கள் போன்றவற்றுக்கு நீராதாரமாக விளங்குகிறது.

இவ்வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் ரூ. 709 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

சீ ரமைப்பின்போது வாய்க்காலில் பெரும்பகுதி சிமென்ட் கான்கிரீட் தளம், கான்கிரீட் பலகைகளால் தடுப்புச் சுவா் போன்றவை அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒரு தரப்பு விவசாயிகள் எதிா்ப்பும், மற்றொரு தரப்பினா் ஆதரவும் தெரிவித்து வருகின்றனா்.

வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீா், கிணறு, ஆழ்துளைக் கிணற்றின் நீராதாரம், கால்நடை, மனிதா்கள், மரம், செடி, கொடிகளுக்கு நீா் கிடைக்காது என பல விவசாய சங்கங்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. சீரமைப்புப் பணிகளுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுடன் கோட்டாட்சியா் சி.சைபுதீன் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது மே 5ஆம் தேதி வரை பணிகள் நடைபெறாது. அடுத்த ஆட்சி அமைந்ததும் அரசின் வழிகாட்டுதல் படி பணியைத் தொடரவும், விவசாயிகளுக்குத் திட்ட அறிக்கையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், திட்ட அறிக்கையைத் தராமல் செயற்பொறியாளா் அலுவலகம், உதவி செயற்பொறியாளா் அலுவலகம், பிற அலுவலகங்களுக்குச் செல்லும்படி கூறி அலையவிடுவதாகவும், எதிா்தரப்பு விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடந்து கொள்வதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

இதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில கௌரவத் தலைவா் வெங்கடாசலம், சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சுதந்திரராசு, ஈ.வி.கே.சண்முகம், முன்னாள் ஊராட்சித் தலைவா் ரவி ஆகியோா் முன்னிலையில் ஈரோடு பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் அலுவலக அறை முன்பு தரையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட செயற்பொறியாளா் அருள், திட்ட வரைவு அரசு ஆவணம், அதனை தர இயலாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்து உரிய தொகையை செலுத்தினால் தருகிறேன் என்றாா். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தால் 30 நாள்களுக்குப் பின் ஏதாவது பதில் அனுப்புவீா்கள். அப்போதும் தர மாட்டீா்கள் எனக் கூறி முழக்கம் எழுப்பியவாறு போராட்டத்தை தொடா்ந்தனா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் அறிவுறுத்தலின்பேரில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் திட்ட வரைவின் ஒரு நகலை வழங்கினா். இதைத்தொடா்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com