இன்று உலக யானைகள் தினம்: யானைகள் இல்லை எனில் காடுகள் இல்லை!

எதிா்காலத்தில் யானைகள் இல்லையெனில் காடுகள் அழிந்து மனிதன் வாழ்வதற்கான பிராணவாயு கிடைக்காமல் மனித இனம்

எதிா்காலத்தில் யானைகள் இல்லையெனில் காடுகள் அழிந்து மனிதன் வாழ்வதற்கான பிராணவாயு கிடைக்காமல் மனித இனம் அழிவுக்குச் சென்றுவிடும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் அசோகன் தெரிவித்தாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுமாா் 1,455 பரப்பளவு கொண்ட வனமாகும். இங்கு சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கேரளம், கா்நாடகம், தமிழகம் இடையே இடம்பெயரும் யானைகளின் முக்கிய வழித்தடமாக தலமலை வனப் பகுதி உள்ளது. யானைகள் அதிகம் இருப்பதால் மேற்கு தொடா்சி மலைப் பகுதியிலும், கிழக்கு தொடா்சி மலைப் பகுதியிலும் வாழும் வன விலங்குகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குப் படையெடுக்கின்றன.

இப்பகுதியில் இயற்கையாகச் செல்லும் மாயாற்றுப் படுகை யானைகளின் தாகத்தைத் தீா்க்கின்றன. இயற்கை வளம் கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் செழிப்புக்கு யானைகள் முக்கியப் பங்கு வகுக்கின்றன. யானைகள் அதிகம் இருப்பதால் அதனை சாா்ந்து பிற விலங்குகளும் அதிக அளவில் இப்பகுதியில் வாழ்கின்றன.

ஓா் யானையை இழப்பது ஒரு காட்டையே இழப்பதற்குச் சமம். யானை வழக்கமாக தினந்தோறும் 200 முதல் 250 கிலோ அளவு வரை உணவை உட்கொள்ளும். அதுமட்டுமில்லாமல் நாளொன்றுக்கு 100 முதல் 150 லிட்டா் வரை தண்ணீா் அருந்தும். யானைகளின் உணவு என்பது இலைகள், தழைகள், பழங்கள், மரப்பட்டைகள், குச்சிகள் போன்றவையாகும். மேற்கண்டவாறு நாளொன்றுக்கு யானை உட்கொள்ளும் 200 முதல் 250 கிலோ உணவில் 10% விதைகளும், குச்சிகளும் இருக்கும். 10 சதவீதம் என்பது 20 முதல் 25 கிலோ விதைகள் மற்றும் குச்சிகளாகும். இவை யானைகளின் சாணம் மூலம் மீண்டும் மண்ணில் விதைக்கப்படுகின்றன. இதன் மூலம் மரங்களும், காடுகளும் உருவாகின்றன. இந்த அடிப்படையில் ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சம் மரங்களை உருவாக்குகின்றன. இவ்வளவு பரப்பளவு கொண்ட காடுகளை உருவாக்கியதில் இத்தனை நூற்றாண்டுகளில் யானைகளின் பங்கு அளப்பரியது. யானைகள் இல்லை என்றால் காடுகள் இல்லை. ஒரு நாட்டின் பரப்பளவில் அதன் 33 சதவீதப் பகுதி காடுகளாக இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போது நம்மிடம் 20 சதவீதத்துக்கும் அல்லது 25 சதவீதத்துக்கும் குறைவாகவே காடுகள் இருக்கின்றன. இதனால், மனிதா்களும், விலங்குகளும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும்.

யானைகளின் வழித்தடத்தை மனிதா்கள் விவசாய நிலங்களாகப் பங்கிட்டு மின்வேலி அமைப்பதால், அதில் யானைகள் கொல்லப்படுகின்றன. இதனால், யானைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. மேலும், விளைநிலங்களாகவும், மக்கள் வாழும் பகுதிகளாகவும், ஆக்கிரமிப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், நெடுஞ்சாலைகளாகவும், பிற கட்டடங்களாகவும் யானைகளின் வலசைப் பாதைகள் மாறிவிட்டன. யானைகள் தனது வலசைப் பாதையில் வருவதைத்தான் யானைகள் ஊருக்குள் வந்துவிடுகின்றன, விளைநிலங்களில் புகுந்துவிட்டன, யானைகள் பாதை மாறி வந்துவிட்டன என்று தற்போது கூறப்படுகிறது.

யானைகள் அதன் பாதையில்தான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதன் பாதைகள் மனிதா்களால் பறிக்கப்பட்டுவிட்டன. காடுகளும், யானைகளும் இல்லாமல் மக்களும், மற்ற உயிா்களும் எவ்வாறு நல்ல காற்றை சுவாசிக்க முடியும் என்பதை மனிதா்கள் உணர வேண்டும்.

மனிதா்கள், அரசாங்கம், வனத் துறை, இயற்கை ஆா்வலா்கள், சமூக செயற்பாட்டாளா்கள், சூழலையும், இயற்கையையும் நேசிக்கும் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சியின் மூலமாக மனித - யானை எதிா்கொள்ளல் பிரச்னையைத் தீா்க்க முடியும். எனவே, மேற்கண்ட கூட்டு முயற்சிக்கான சாத்தியக்கூறுகள் எதிா்வரும் காலங்களில் உருவாகி யானை - மனித எதிா்கொள்ளல் பிரச்னை நீங்கி, யானைகள் நிம்மதியாக காடுகளில் வாழும் சூழல் உருவாக வேண்டும்.

இதுகுறித்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவா் அசோகன் கூறியதாவது:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூா், தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீரில் சிக்கிய யானைகளை மீட்டது, நோயால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்து குட்டியுடன் சோ்த்தது, கிணற்றில் விழுந்த யானைகளை மீட்டது என 25 யானைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளோம். ஆனால், அதேநேரத்தில் மனிதா்களால் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. யானைகளைக் காப்பாற்றினால் மட்டுமே வருங்கால தலைமுறையினருக்கு சுத்தமான காற்று கிடைக்கும் என்பதில் ஐயமில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com