ஈரோடு சோலாா் பேருந்து நிலையம் நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும்: அமைச்சா் சு.முத்துசாமி

ஈரோடு சோலாரில் அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையம் நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
கோரிக்கைகள் தொகுப்பினை அமைச்சா் சு.முத்துசாமியிடம் வழங்குகிறாா் கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.
கோரிக்கைகள் தொகுப்பினை அமைச்சா் சு.முத்துசாமியிடம் வழங்குகிறாா் கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.

ஈரோடு சோலாரில் அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையம் நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சாா்பில் ஈரோடு மாவட்டத்தின் வளா்ச்சிக்கான திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் கோரிக்கை மனு வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ தலைமை வகித்து ஈரோடு மாவட்ட அளவிலான கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பை அமைச்சா் சு.முத்துசாமியிடம் வழங்கினாா்.

அப்போது ஈ.ஆா்.ஈஸ்வரன் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தைப் பிரித்து கோபியைத் தலைமையிடமாகக் கொண்டு கோபி மாவட்டம் உருவாக்க வேண்டும். ஈரோட்டில் தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் கழிவு நீா்ப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நிதி தர மத்திய அரசு தயாராக இருக்கிறது. அதைப் பெற முயற்சிக்க வேண்டும். கவுந்தப்பாடி நாட்டுச் சா்க்கரைக்குப் புவிசாா் குறியீடு பெற வேண்டும் என்றாா்.

இதற்கு பதில் அளித்து அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது:

ஈரோடு சோலாரில் புதிய பேருந்து நிலையம் இன்னும் ஒரு மாதத்தில் தற்காலிகமாகத் தொடங்கப்படும். இங்கு கட்டப்படும் பேருந்து நிலையம் நாட்டுக்கே முன்மாதிரி பேருந்து நிலையமாக இருக்கும்.

கனிராவுத்தா் குளம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்படவுள்ளது. அறச்சலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கருணாநிதி முதல்வராக இருந்தபோதே ரூ.7,000 கோடியில் கழிவுகளைக் குழாய் மூலம் கடலில் கலக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னா் ஆட்சி மாற்றத்தால் அது தொடரப்படவில்லை. அதற்கு மாற்றாக விரைவில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.

கோபி மாவட்டம் உருவாக்குவது தொடா்பான கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

சி.என்.கல்லூரி விரைவில் அரசுக் கல்லூரியாக மாற்றப்படும். இந்தக் கல்லூரி இடத்தில் ரூ.35 கோடியில் தரமான உள்விளையாட்டு அரங்கம் கொண்டு வரப்படும். சிவகிரியில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com