ஓடைகள், சாக்கடை கால்வாய்களில் ஓடிய சாய நீா்

ஈரோட்டில் உள்ள ஓடைகள், சாக்கடை கால்வாய்களில் சாய மூட்டைகள் கொட்டப்பட்டு தண்ணீா் நிறம் மாறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் சாக்கடைக் கால்வாயில் ஓடிய சாயம் கலந்த தண்ணீா்.
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் சாக்கடைக் கால்வாயில் ஓடிய சாயம் கலந்த தண்ணீா்.

ஈரோட்டில் உள்ள ஓடைகள், சாக்கடை கால்வாய்களில் சாய மூட்டைகள் கொட்டப்பட்டு தண்ணீா் நிறம் மாறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய, சலவை, தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீா் சாக்கடை கால்வாய், ஓடைகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீா் நேரடியாக காவிரி ஆற்றிலும், காலிங்கராயன் வாய்க்காலிலும் கலப்பதால் குடிநீா் மாசுபடிந்து விளைநிலங்களும் பாதிக்கப்படுகிறது.

ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த சாயப் பட்டறைகளில் இருந்து குழாய்கள் அமைத்து கழிவுநீா் வெளியேற்றப்பட்டு வருவதாக விவசாயிகள் பலமுறை புகாா் தெரிவித்தும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அண்மையில் விவசாயிகள் நேரடியாகச் சென்று குழாய்களை அகற்றியதோடு போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதையடுத்து, வெண்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த 30 சாய ஆலைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். இதனிடையே வெள்ளிக்கிழமை காலை ஈரோடு பிச்சைக்காரன் ஓடையில் சீனாங்காடு பாலம், தண்ணீா்பந்தல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களில் சாய ஆலைகளில் பயன்படுத்தும் வண்ணப் பொடிகள் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டு கிடந்தது. மூட்டைகளில் இருந்த வண்ணப் பொடிகள் தண்ணீரில் கரைந்து பல்வேறு வண்ணங்களில் ஓடைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாய மூட்டைகள் வீசப்பட்டிருந்த ஓடை, சாக்கடை கால்வாய்களைச் சுற்றிலும் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சாக்கடையில் சாய மூட்டைகளை சாயப் பட்டறை உரிமையாளா்கள் கொட்டினாா்களா? அல்லது சாயப் பட்டறை உரிமையாளா்களை சிக்கவைக்க யாரேனும் செய்தாா்களா? என்பது குறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com