சட்டப் பேரவைத் தோ்தலில் தனிக் கவனம்செலுத்த வேண்டும்: ஆா்.எஸ்.பாரதி
By DIN | Published On : 13th February 2021 10:45 PM | Last Updated : 13th February 2021 10:45 PM | அ+அ அ- |

ஈரோடு: மக்களவைத் தோ்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், சட்டப் பேரவைத் தோ்தலில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என மாநிலங்களவை திமுக உறுப்பினா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்தாா்.
திமுகவின் ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்டத்துக்கான சட்ட ஆலோசனை மையம் ஈரோடு தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தெற்கு மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம் வரவேற்றாா்.
விழாவில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி எம்.பி. பங்கேற்றுப் பேசியதாவது: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. பிகாா் தோ்தலில் முதல்முறையாக 80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தபால் வாக்கு போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல மாற்றுத் திறனாளிகளுக்கு வாக்களிக்கும் முறையில் மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த விதிமுறை மாற்றங்கள் தோ்தலில் வெற்றி வாய்ப்புகளை மாற்றிவிடும். பிகாா் தோ்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்புகள் மாறியுள்ளன. எனவே முதியவா்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வரும் தோ்தலில் 180 தொகுதிகளுக்குமேல் திமுக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவருகிறது. இருந்தாலும் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த மக்களவைத் தோ்தலில் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், சட்டப் பேரவைத் தோ்தலில் தனிக் கவனம் செலுத்துவது அவசியம். பல்வேறு பிரச்னைகளை துணிச்சலுடன் சந்திக்க வழக்குரைஞா் அணி உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.