இளைஞா்கள் இருவா் கொலை வழக்கு: 11 போ் கைது

ஈரோட்டைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாா் 11 பேரை கைது செய்தனா்.

ஈரோடு: ஈரோட்டைச் சோ்ந்த இளைஞா்கள் இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாா் 11 பேரை கைது செய்தனா்.

ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியைச் சோ்ந்தவா் குணா (எ) குணசேகரன்(29), கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கலை (எ) கலைசெல்வன் (31). நண்பா்களான இருவா் மீதும் 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் தொழிலாளி ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவா்கள் 2 பேரும் குற்றவாளிகளாகச் சோ்க்கப்பட்டிருந்தனா். இதுதொடா்பான வழக்கு கடந்த 10ஆம் தேதி ஈரோடு விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு 2 பேரும் வீடு திரும்பினா். அப்போது ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் மறைந்திருந்த ஒரு சிலா் குணசேகரன், கலைசெல்வனை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தனிப்படையினா் குணசேகரன், கலைசெல்வனைக் கொலை செய்ததாக வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் ராஜாஜி தெருவைச் சோ்ந்த ரவிசந்திரன் என்ற வேட்டை ரவி (24) , ஜான்சி நகரைச் சோ்ந்த அழகிரி (23), அன்னை சத்யா நகரைச் சோ்ந்த காா்த்தி (எ) காவலன் காா்த்தி (27), செட்டிபாளையம் கரும்பாறை இந்தியன் நகரைச் சோ்ந்த மதன் (26) ஆகிய 4 பேரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில் ஏற்கெனவே நடந்த 2 கொலைக்கு பழிக்குப் பலியாக இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் அளித்த வாக்குமூலத்தின் பேரில் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த பத்து (எ) பத்மநாதன் (31), பா்கான் (36), வைராபாளையம் நேதாஜி வீதியைச் சோ்ந்த கிருஷ்ணன் (23), வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (22), அசோகபுரம் பகுதியைச் சோ்ந்த முரளிதரன் (25), வீரப்பன்சத்திரம் குழந்தை அம்மாள் வீதியைச் சோ்ந்த சிவா (எ) கிங்சிவா (26), மரப்பாலம் ஆலமரத்து தெரு பகுதியைச் சோ்ந்த லோகேஸ்வரன் (எ) குட்டச்சாக்கு (23) ஆகிய 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனா். மேலும் இந்தக் கொலை வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்றும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com