முன்களப் பணியாளா்கள் 13,800 பேருக்கு கரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் முன்களப் பணியாளா்கள் 13,800 பேருக்கு சனிக்கிழமை (ஜனவரி 16) முதல் கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் முன்களப் பணியாளா்கள் 13,800 பேருக்கு சனிக்கிழமை (ஜனவரி 16) முதல் கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை நாடு முழுவதும் பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி புணேயில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலமாகத் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்குத் தடுப்பூசி அனுப்பி வைக்கும் பணியில் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அதேசமயம் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சனிக்கிழமை முதல் தடுப்பூசி போடப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி அரசு மருத்துவமனைகள், பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிறுவலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சூரம்பட்டி நகா் நல மையம், ஈரோட்டில் உள்ள கோ் 24 தனியாா் மருத்துவமனை ஆகிய 7 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் முதல்கட்டமாக மருத்துவா்கள், செவிலியா், மருத்துவமனை துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி போடப்படவுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சென்னையில் இருந்து கரோனா தடுப்பூசி மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதேபோல ஈரோடு மாவட்டத்துக்குத் தேவையான தடுப்பூசிகள் கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு தடுப்பூசிகள் கொண்டு வரப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 13,800 பேருக்கு தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளது. இந்த தடுப்பூசிகள் 86 குளிரூட்டப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படும். 7 மையங்களிலும் தினமும் தலா 100 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்பவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படுவாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com