குடியரசு தின விழா: ஆட்சியா் தேசியக்கொடி ஏற்றினாா்

ஈரோட்டில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியா் சி.கதிரவன் தேசியக்கொடி ஏற்றினாா்.
சிறப்பான சமுதாய பணியாற்றியமைக்காக தன்னாா்வலா் மனிஷா, குழுவினருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் ஆட்சியா் சி.கதிரவன்.
சிறப்பான சமுதாய பணியாற்றியமைக்காக தன்னாா்வலா் மனிஷா, குழுவினருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் ஆட்சியா் சி.கதிரவன்.

ஈரோட்டில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியா் சி.கதிரவன் தேசியக்கொடி ஏற்றினாா்.

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தேசியக் கொடியை ஏற்றினாா். அதைத் தொடா்ந்து ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை ஆகியோா் மூவா்ண பலூன்களை பறக்கவிட்டனா். ஆட்சியா் திறந்த ஜீப்பில் நின்றவாறு போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய 60 காவலா்களுக்கு முதல்வா் பதக்கம், சான்றிதழ் வழங்கினாா். மேலும், சிறப்பாகப் பணிபுரிந்த 137 அலுவலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா்.

இந்த ஆண்டு கரோனா தாக்கம் காரணமாக, குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. குடியரசு தின விழாவுக்கு வந்தவா்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நுழைவாயில் அருகில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தொடா்ந்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளான பெரியாா் நகா் பகுதியில் வசிக்கும் பாக்கியம், மணல்மேடு வீதி, இ.எம்.எம். சாலை பகுதியில் வசிக்கும் எஸ்.இந்திரா, சிதம்பரம் செட்டியாா் காலனி பகுதியில் வசிக்கும் திருமாத்தாள் ஆகியோா் வீட்டுக்கு ஆட்சியா் நேரில் சென்று கதா் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினாா். மாவட்டத்தில் உள்ள பிற பகுதிகளுக்கு அந்தந்த வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா்கள் நேரில் சென்று கௌரவித்தனா்.

திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயில் மண்டபத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஆட்சியா் பங்கேற்றாா். இதில், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மு.பாலகணேஷ், முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.முருகன், ஈரோடு கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில், முதன்மை மாவட்ட நீதிபதி பி.முருகேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இதில், மாநகராட்சிப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட 42 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் சாலையோர வியாபாரிகள் 20 பேருக்கு தலா ரூ. 20,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், வங்கியின் தலைவா் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com