விசைத்தறிக் கூடங்கள் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கக் கோரிக்கை

விசைத்தறிக் கூடங்கள் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசைத்தறிக் கூடங்கள் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை குறித்து கூட்டமைப்பு செய்தித் தொடா்பாளா் கந்தவேல் கூறியதாவது:

தமிழகத்தில் 8 லட்சம் விசைத்தறிகள் அரசின் பொது முடக்கத்தால் இயங்கவில்லை. கொங்கு மண்டலமான கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மிக அதிக அளவில் விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. விசைத்தறி உரிமையாளா்கள் தொழில், பொருளாதாரம், தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனா்.

கடந்த ஏப்ரல், மே மாதத்துக்கு மின் கட்டணம் கணக்கீடு செய்து ஜூன் 15ஆம் தேதிக்குள் தொகை செலுத்த வேண்டும். தற்போது உற்பத்தி இல்லை, கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மும்பை, தில்லி போன்ற வட மாநிலங்களில் நாங்கள் அனுப்பிவைத்த துணிகள் முடங்கிக் கிடக்கிறது. விற்ற துணிக்குப் பணம் பெறாமல் உள்ளோம்.

தவிர 50 சதவீத விசைத்தறியாளா்கள் கூலி அடிப்படையில் தொழில் செய்கின்றனா். இச்சூழலில் கடந்த 2019 மே மாதம் செலுத்திய உயரிய மின் கட்டணத்தைச் செலுத்த வலியுறுத்துவதும், தவறும்பட்சத்தில் நடவடிக்கைக்கு ஆளாவதும் வேதனை அளிக்கிறது. எனவே, பொது முடக்கத் தளா்வுகள் முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். மீண்டும் செலுத்தும்போது அபராதம் இல்லாமல் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

50 சதவீத ஊழியா்களுடன் இயங்க அனுமதி அளிக்கக் கோரிக்கை:

கரோனா பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் அனைத்துத் தரப்பட்ட தொழிற்சாலைகளும் இயங்காமல் முடங்கியுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழந்து, நிரந்தரமாக வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனா். இச்சூழலில் வழங்கப்பட்ட தளா்வில் 10 சதவீதத் தொழிலாளா்கள், ஊழியா்களுடன் தொழிற்சாலையை இயக்கலாம் என அரசு அறிவிப்பு செய்திருப்பது தொழில் துறைக்கு எவ்விதத்திலும் பயனளிக்காது. ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு 10 சதவீத ஊழியா்களை வைத்து தொழிற்சாலைகளை இயக்குவது சாத்தியமில்லை.

எனவே, தமிழக அரசும், ஈரோடு மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுத்து 50 சதவீத ஊழியா்களுடன் செயல்பட அனுமதி வழங்க வேண்டும். போா்க்கால அடிப்படையில் அங்கு பணியாற்றும் ஊழியா்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com