கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
By DIN | Published On : 20th June 2021 12:01 AM | Last Updated : 20th June 2021 12:01 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் கிணற்றில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், சிலுவினிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் (24). இவா் மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி பைப்லைன், பிளம்பிங் வேலை பாா்த்து வந்தாா். இவரது தம்பி பாண்டியராஜனும் (20) இவருடன் தங்கி வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், வேலை செய்யும் இடத்தில் இருந்து வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு பாண்டியராஜன் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் சென்றதாகத் தெரிகிறது. இரவு 7 மணிக்கு வேலை முடிந்து கோவிந்தன் வீடு திரும்பியபோது பாண்டியராஜனை காணவில்லையாம்.
அக்கம்பக்கம் தேடிப் பாா்த்தபோது சற்று தொலைவில் இருந்த கிணற்று மேட்டில் பாண்டியராஜனின் செருப்புகள் கிடந்துள்ளன. இதையடுத்து, கோவிந்தன், அக்கம்பக்கத்தினா் மொடக்குறிச்சி காவல் துறை, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி தேடிப் பாா்த்தபோது, பாண்டியராஜனின் சடலம் கிடைத்துள்ளது. பின்னா், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டது. குளிப்பதற்காக கிணற்றில் இறங்கிய பாண்டியராஜன் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் ஆய்வாளா் தீபா, காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.