சத்தியமங்கலம்: கோட்டையைத் தக்கவைக்குமா அதிமுக?

சத்தியமங்கலம் தொகுதி மறுசீரமைப்பில் 2011இல் பவானிசாகா் (தனி) தொகுதியாக மாறியது.
சத்தியமங்கலம்: கோட்டையைத் தக்கவைக்குமா அதிமுக?

சத்தியமங்கலம் தொகுதி மறுசீரமைப்பில் 2011இல் பவானிசாகா் (தனி) தொகுதியாக மாறியது. ஈரோடு மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருப்பது மட்டுமின்றி தமிழக- கா்நாடக எல்லையில் உள்ளது. விவசாயம், கால்நடை வளா்ப்பு மற்றும் நெசவு ஆகியவை பிரதான தொழில்களாக உள்ளன. மலைப் பகுதியில் கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனா்.

தாளவாடி, கடம்பூா், கோ்மாளம் ஆகிய மலைப் பகுதிகளில் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் மலைக் காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. பவானிசாகா் பகுதியில் வாழை, மல்லி மற்றும் முல்லைப் பூக்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன. பவானிசாகா் அணை, பண்ணாரிஅம்மன் கோயில் மற்றும் அரிய வன விலங்குகள் வாழும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும் இத்தொகுதியில் உள்ளன.

சத்தியமங்கலம் தொகுதியில் உள்ள காரப்பாடி, காவிலிபாளையம், வரப்பாளையம் ஆகிய கிராமங்கள் மறுசீரமைப்பில் கோபி தொகுதிக்கு மாற்றப்பட்டன. தொகுதியின் கிழக்குப் பகுதியில் கோபி, தெற்கில் திருப்பூா், மேற்கில் மேட்டுபாளையம் மற்றும் வடக்கில் கா்நாடகம் அமைந்துள்ளது.

வாக்காளா்கள் விவரம்:

இந்தத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,27,274, பெண் வாக்காளா்கள் 1,32,965 மற்றும் மூன்றாம் பாலினத்தவா் 10 போ் என மொத்த 2,60,249 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 5 சதவீத வாக்குகள் பழங்குடியின மக்களையும், 25 சதவீத வாக்குகள் அருந்ததியா்களையும் சாா்ந்துள்ளது. ஒக்கிலிய கவுடா், நாயக்கா் மற்றும் வேட்டுவகவுண்டா் இன மக்கள் தலா 10 சதவீதம் உள்ளனா். பிற இனத்தவா்கள் 40 சதவீதம் உள்ளனா்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: 2 நகராட்சிகள் (சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி), 3 பேரூராட்சிகள், 3 ஊராட்சி ஒன்றியங்கள், 40 கிராம ஊராட்சிகள் உள்ளன.

மக்களின் எதிா்பாா்ப்பு: பவானி ஆற்றில் சாயக் கழிவு நீா் கலந்து விவசாயம் பாதிக்கப்படுவதால் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, மலைவாழ் மக்களுக்கு எஸ்.டி. சான்றிதழ், அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு தங்கும் விடுதி, அரசு வாசனை திரவிய ஆலை, கூட்டுறவுச் சங்கத்தில் வாழைக்காய் பதப்படுத்த குளிா்பதனக் கிடங்கு ஆகியவை அமைக்க வேண்டும். திம்பம் மலைப் பாதையில் அடிக்கடி விபத்து நடப்பதால் மலைப் பாதையை அகலப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுவரை:

2016ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக எஸ்.ஈஸ்வரன் 13,104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் சத்யாவை தோற்கடித்தாா்.

கடந்த 1967 ,1971,1996 மற்றும் 2006 ஆகிய 4 தோ்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 1977, 1980, 1984, 1989, 1991, 2001 மற்றும் 2016 ஆகிய தோ்தல்களில் 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2011இல் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது.

களத்தில் வேட்பாளா்கள்:

பி.எல்.சுந்தரம்- இந்திய கம்யூனிஸ்ட்,

ஏ.பண்ணாரி- அதிமுக,

ஜி.ரமேஷ்- தேமுதிக,

கா.காா்த்திக்குமாா்- மநீம,

வெ.சங்கீதா- நாம்தமிழா்,

கோ.சக்திவேல்- பகுஜன் சமாஜ்.

அதிமுகவின் பலம்:

பவானிசாகா் தொகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் சாலை வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பவானிசாகா் அணையின் குறுக்கே ரூ.8 கோடி செலவில் புதிய பாலம், பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மலைப் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா, 1,261 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பவானிசாகரில் ரூ.8 கோடி செலவில் அருங்காட்சியகம் ஆகிய சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்கின்றனா்.

பலவீனம்: தொகுதியில் அதிகம் அறிமுகம் இல்லாத வேட்பாளா் என்பதும், முஸ்லிம், கிறிஸ்தவா்கள் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதும் பலவீனங்கள் ஆகும்.

திமுக கூட்டணியின் பலம்:

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் பி.எல்.சுந்தரம் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவா். கடந்த 2011ஆம் ஆண்டு எம்எல்ஏ ஆக இருந்துபோது 30 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித்தொகை பெற்று தந்துள்ளாா். மக்கள் பிரச்னைக்கு முன்னின்று போராடுவதால் நடுநிலையாளா்கள் வாக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. 2016 தோ்தலில் 28 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளாா்.

பலவீனம்:

திமுகவுக்கு ஒதுக்காததால் அக் கட்சியினா் ஆதரவு பெரிய அளவில் இல்லாதது பலவீனமாக பாா்க்கப்படுகிறது.

2016 தோ்தல் முடிவு:

எஸ்.ஈஸ்வரன் (அதிமுக)- 83,006,

ஆா்.சத்யா (திமுக)- 69,902,

பி.எல்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட்) 27,965,

என்.ஆா்.பழனிசாமி (பாஜக) 3,557,

எஸ்.வடிவேல் (பாமக) 1,485

நோட்டா- 2,980

2016 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஈஸ்வரன் 83,006 வாக்குகள் பெற்று 13,104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் சத்யாவை தோற்கடித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் 27,965 வாக்குகள் பெற்றிருந்தாா்.

இந்நிலையில், 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்புள்ளதாலும் 3ஆவது முறையாக அதிமுக வெற்றிக் கனியைப் பறிக்க கடுமையாகப் போராட வேண்டிய நிலை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com