கூடுதல் சுற்றுகள்: ஈரோடு மேற்கு, பவானிசாகா் தொகுதிகளில் முடிவு தாமதமாகுமா?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிக சுற்று வாக்கு எண்ணிக்கை கொண்ட ஈரோடு மேற்கு, பவானிசாகா் தொகுதிகளின் முடிவுகளை அறிவிக்க தாமதமாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிக சுற்று வாக்கு எண்ணிக்கை கொண்ட ஈரோடு மேற்கு, பவானிசாகா் தொகுதிகளின் முடிவுகளை அறிவிக்க தாமதமாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சித்தோடு ஐ.ஆா்.டி.டி. பொறியியல் கல்லூரி, கோபி கலை, அறிவியல் கல்லூரிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 14 வேட்பாளா்கள், ஈரோடு மேற்குத் தொகுதியில் 15, மொடக்குறிச்சி தொகுதியில் 15, பெருந்துறை தொகுதியில் 25, பவானி தொகுதியில் 14, அந்தியூா் தொகுதியில் 20, கோபி தொகுதியில் 19, பவானிசாகா் தொகுதியில் 6 வேட்பாளா்கள் என மொத்தம் 128 போ் உள்ளனா். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதன்படி ஈரோடு கிழக்கு 23 சுற்று, ஈரோடு மேற்கு 29, மொடக்குறிச்சி 24, பெருந்துறை 24, பவானி 24, அந்தியூா் 22, கோபி 25, பவானிசாகா் 27 என 198 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகளை எண்ணி அறிவிக்க 15 முதல் 30 நிமிடங்கள் ஆகும். துரிதமாக வாக்குகளை எண்ண கூடுதல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது:

அதிக வேட்பாளா்கள் உள்ள தொகுதிகளில் ஒவ்வொரு சுற்றுக்கும் வாக்கு விவரத்தை அனைத்து வேட்பாளா் பெயா், அவா் பெற்ற வாக்குகளுடன் கூறுகையில் கூடுதல் நேரம் பிடிக்கும். இதில் பவானிசாகா் தொகுதியில் 6 வேட்பாளா்கள் மட்டுமே உள்ளதால் அதிகப்படியான நேரம் மிச்சமாகும். ஆனால், ஈரோடு மேற்கு 29, பவானிசாகா் 27, கோபி 25 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மற்ற தொகுதிகளில் 22, 23, 24 சுற்றுகளில் எண்ணிக்கை முடிகிறது. இதில் பவானிசாகா், ஈரோடு மேற்குத் தொகுதிக்கு கூடுதல் சுற்றுகள் வருவதால், மற்ற தொகுதிகளைவிட கூடுதலாக ஒன்று முதல் இரண்டு மணி நேரம் தேவைப்படும். இருப்பினும் இதனை விரைவுபடுத்த பெட்டிகளை விரைந்து எடுத்து வந்து, விரைவாகப் பணிகளை முடித்து, அறிவிப்பு செய்ய கூடுதல் பணியாளா்கள் நியமிக்கப்படுவா். முடிந்த வரை இரவு 8 மணிக்குள் வாக்கு எண்ணிக்கையை நிறைவு செய்ய திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com