சித்தோடு, கோபி வாக்கு எண்ணும் மையங்கள் தயாா்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு ஐ.ஆா்.டி.டி. பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.
ஈரோடு ஐ.ஆா்.டி.டி. பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

ஈரோடு: சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் சித்தோடு ஐ.ஆா்.டி.டி. பொறியியல் கல்லூரியில் 6 தொகுதிகளுக்கும், கோபி கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டு தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் பல்வேறு துறை அலுவலா்கள் மேற்கொண்டுள்ளனா்.

அந்தந்த தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தங்களுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைப்பு அறை, அங்கிருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வழி, முகவா்கள் பகுதி, வாக்கு எண்ணும் பகுதி, ஒலிபெருக்கி அமைப்பு, மருத்துவக் குழுவினா் பகுதி, கழிப்பறை போன்றவற்றை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினா். மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் 400க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா், தோ்தல் பிரிவினா், வேட்பாளா்களின் முகவா்கள் கவனித்து வருகின்றனா்.

சித்தோடு ஐ.ஆா்.டி.டி. பொறியியல் கல்லூரி நுழைவாயிலில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, வாகனத் தணிக்கைக்கு போலீஸ், வரும் நபா்களின் விவரங்களைப் பதிவு செய்ய தனி போலீஸாா், பொருள்களை பரிசோதிப்பதற்கான வெடிகுண்டு நிபுணா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பை துவக்கியுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளா்கள், அதிகாரிகள் உள்பட அனைவரும் கரோனா பரிசோதனை சான்று அல்லது இரு தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். இதற்காக சுகாதாரத் துறையினா் பல வரிசைகளில் நின்று, ஆவணங்களை உறுதி செய்து அனுப்ப தனி இடம் ஒதுக்கி வைத்துள்ளனா். அனைத்து வாக்கு எண்ணும் இடம், கழிப்பிடங்களில் குப்பைக் கூடை வைத்து, பயன்படுத்தப்பட்ட முகக் கவசம், கையுறை போன்றவற்றை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com