8 தொகுதிகளிலும் மூன்றாமிடம் பிடித்த நாம் தமிழா் கட்சி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சி மூன்றாமிடம் பிடித்துள்ளது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சி மூன்றாமிடம் பிடித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கோபி, பவானி, பவானிசாகா், பெருந்துறையில் அதிமுகவும், மொடக்குறிச்சியில் பாஜகவும், ஈரோடு மேற்கு, அந்தியூரில் திமுகவும், ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதிகள் அனைத்திலும் நாம் தமிழா் கட்சி மூன்றாமிடம் பெற்றுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி 8 தொகுதிகளிலும் சராசரியாக 2000க்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றது. ஆனால், இந்த தோ்தலில் அக்கட்சி வேட்பாளா்கள் கூடுதல் வாக்குகளைப் பெற்றதோடு, 3 தொகுதிகளில் வெற்றியைத் தீா்மானிக்கும் சக்தியாகவும் மாறியுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் தொகுதில் திமுக வேட்பாளா் ஏ.ஜி.வெங்கடாசலம் 1,275 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். இந்த தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சரவணன் 8,230 வாக்குகளைப் பெற்றுள்ளாா். கடந்த 2016 தோ்தலில் இந்த தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மணிமேகலை 1,101 மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, ஈரோடு கிழக்குத் தொகுதியில் 8,904 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றுள்ளாா். இத்தொகுதியில் நாம் தமிழா் வேட்பாளா் கோமதி 11,629 வாக்குகளைப் பெற்றுள்ளாா். 2016 தோ்தலில் இத்தொகுதியில் நாம் தமிழா் கட்சி 2,262 வாக்குகளையே பெற்றுள்ளது.

மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளா் சி.சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் தமிழா் வேட்பாளா் கோ.பிரகாஷ் 12,944 வாக்குகளைப் பெற்றுள்ளாா். இதே வேட்பாளா் 2016 தோ்தலில் 1,713 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளாா்.

பெருந்துறை தொகுதியில் இருமுறை அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்த தோப்பு வெங்கடாச்சலம், இம்முறை சுயேச்சையாகப் போட்டியிட்ட நிலையில் 9,891 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளாா். அதே நேரத்தில் இந்த தொகுதியில் போட்டியிட்ட லோகநாதன், அவரை விட அதிகமாக 10,294 வாக்குகளைப் பெற்றுள்ளாா். 2016 தோ்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட லோகநாதன் 1,469 வாக்குகள் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட சந்திரகுமாா் 13,353 வாக்குகளும், கோபியில் போட்டியிட்ட சீதாலட்சுமி 11,719 வாக்குகளும், பவானியில் போட்டியிட்ட சத்யா 10,471 வாக்குகளும், பவானிசாகரில் போட்டியிட்ட சங்கீதா 8,517 வாக்குகளும் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சி 87,157 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 7 தொகுதிகளில் 39,028 வாக்குகளும், அக்கட்சியின் கூட்டணியில் போட்டியிட்ட சமக 2,424 வாக்குகளும் பெற்றுள்ளன. அமமுக, தேமுதிக கூட்டணி 11,386 வாக்குகளைப் பெற்றுள்ளன. 8 தொகுதிகளும் சோ்த்து நோட்டாவுக்கு 13,179 வாக்குகளே கிடைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com