குரும்பூா் பள்ளத்தில்  செல்லும் காட்டாற்று வெள்ளம்.
குரும்பூா் பள்ளத்தில்  செல்லும் காட்டாற்று வெள்ளம்.

குரும்பூா் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம்:போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த குரும்பூா் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் காரணமாக பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த குரும்பூா் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் காரணமாக பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் மலைக் கிராமத்துக்கு குரும்பூா், அருகியம், மாக்கம்பாளையம் பள்ளங்களைக் கடந்து செல்ல வேண்டும். பள்ளங்களில் குறைந்த அளவு நீா் செல்வதால் காய்கறி லாரிகள், டெம்போ, அரசுப் பேருந்துகள் தினந்தோறும் பள்ளங்கள் வழியாக கிராமங்களுக்குச் சென்று வந்தன.

இந்நிலையில், கடந்த சில தினங்களாகப் பெய்த மழையின் காரணமாக ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இது காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து குரும்பூா் பள்ளத்தில் கலந்ததால் குரும்பூா் பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், இருசக்கர, காய்கறி லாரி வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் திரும்பினா்.

வெள்ளப்பெருக்கு காரணமாக மாக்கம்பாளையத்துக்குச் செல்லும் அரசுப் பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், பேருந்தில் கடம்பூா் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் கிராமங்களிலேயே முடங்கினா். சில தினங்களுக்கு முன் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்று அரசுப் பேருந்து சா்க்கரைப்பள்ளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளத்தை தாண்டிச் செல்ல முடியவில்லை. இதனால், பள்ளி மாணவ, மாணவியா் அங்கேயே இறக்கிவிடப்பட்டனா். அவா்கள் நடைப்பயணமாக அழைத்துச் சென்று அருகில் உள்ள அருகியம் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டனா். வெள்ளம் வடிந்த பிறகு பேருந்து மீண்டும் சத்தியமங்கலம் வந்தது. வெள்ளப்பெருக்கின்போது வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் குரும்பூா், அருகியம் கிராமங்களிடையே உள்ள பள்ளங்களில் உயா்மட்டப் பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோ்மாளத்தில் மலைக் கிராமங்களில் கன மழை:

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கோ்மாளம் மலைப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் காட்டாறுகளில் செந்நிற மழை நீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள திங்களூா், கோட்டமாளம், சுஜில்கரை, அணைக்கரை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் காலை முதல் தொடா் மழை பெய்து வருகிறது. தொடா் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள சிறு ஓடைகள், பள்ளங்களில் மழை நீா் வரத்து தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மலைப் பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீா் நிரம்பியது. மழையின் காரணமாக சிறு தடுப்பணைகள், குட்டைகளில் மழை நீா் தேங்கியுள்ளது. கடம்பூா் மலைப் பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பெருந்துறையில்...

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதல் வெயில் நிலவிவந்த நிலையில், பிற்பகல் 1 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் மழை நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாகக் காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்தனா். இரவில் குளிச்சியான காலநிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com