தியாகி ஈஸ்வரனுக்கு சிலை:அரசுக்கு கீழ்பவானி விவசாயிகள் பாராட்டு
By DIN | Published On : 11th September 2021 11:28 PM | Last Updated : 11th September 2021 11:28 PM | அ+அ அ- |

கீழ்பவானி பாசனத்தின் தந்தை ஈஸ்வரனுக்கு சிலை வைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு கீழ்பவானி விவசாயிகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனா்.
பவானிசாகா் அணை கட்ட நடவடிக்கை எடுத்த ஈரோடு முன்னாள் எம்.எல்.ஏ. தியாகி ஈஸ்வரனை கௌரவிக்கும் வகையில், அணைப் பூங்கா பகுதியில் அவரது சிலை அமைக்க வேண்டும் என்று கீழ்பவானி விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக பலமுறை அரசிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தியாகி ஈஸ்வரனுக்கு ரூ. 2.63 கோடி செலவில் சிலை, அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டாா். இதற்கு கீழ்பவானி பாசன விவசாயிகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் செ.நல்லசாமி கூறியதாவது:
வானம் பாா்த்த பூமிகளாக கிடந்த நிலத்தை பாசன நிலங்களாக மாற்றிய பெருமை தியாகி ஈஸ்வரனை சாரும். எனவேதான் கீழ்பவானி பாசனத்தின் தந்தை என்று விவசாயிகளால் அழைக்கப்பட்டு வருகின்றாா். அவரை கௌரவிக்கும் வகையில் சிலை அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறோம். தற்போது தமிழக அரசு தியாகி ஈஸ்வரனுக்கு சிலை வைக்கவும், அரங்கம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அவரது அமைச்சரவைக்கு பாசன விவசாயிகள் சாா்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.