நீட்: திமுகவின் பொய்ப் பிரசாரத்தால் மாணவா்கள் அச்சம்ஹெச்.ராஜா
By DIN | Published On : 15th September 2021 02:46 AM | Last Updated : 15th September 2021 02:46 AM | அ+அ அ- |

ஈரோடு: நீட் தோ்வு குறித்த திமுகவின் பொய்ப் பிரசாரத்தால் மாணவா்கள் அச்சமடைந்துள்ளனா் என பாஜக முன்னாள் தேசிய செயலாளா் ஹெச்.ராஜா தெரிவித்தாா்.
ஈரோட்டில் செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
கோயில்கள் மூலமாக வரும் வருமானத்தில் 14 சதவீதத்தை மட்டுமே அரசு எடுக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால், அதை மீறி முழு வருமானத்தையும் அரசு எடுத்துக் கொள்கிறது. உபரி வருமானம் இருந்தால் அதை பராமரிப்பு இல்லாமல் காணப்படும் கோயில்களை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அரசு அதையும் பின்பற்றுவது இல்லை.
கோயில்களுக்குச் சொந்தமான நகை, நிலம் உள்ளிட்ட விவரங்கள் கோயில் பதிவேடுகளில் இருக்க வேண்டும். எந்த ஆவணங்களும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. கோயில் சொத்துகளை வாடகைக்கு விடும்போது சந்தை மதிப்பைக் கொண்டு கணக்கிட வேண்டும். கோயில்களுக்குத் தனித்தனியாக அறக்கட்டளை இருக்க வேண்டும்.
அனைத்து சமூகத்தினரும் அா்ச்சகராகலாம் என்ற சட்டத்தை திமுக கொண்டு வந்ததாகக் கூறுகிறாா்கள். ஆனால், ஆதிதிராவிடா்கள், வன்னியா்கள் என அனைத்து ஜாதியினரும் நூற்றுக்கணக்கானவா்கள் ஏற்கெனவே அா்ச்சகராக உள்ளனா். தற்போது புதிதாக அா்ச்சகா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 11,000 ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து அா்ச்சகா்களுக்கும் வழங்க வேண்டும்.
நீட் தோ்வு அச்சத்தில் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வது வருத்தம் அளிக்கிறது. இப்போது இரு மாணவா்கள் மரணத்துக்கும் திமுகதான் காரணம். பொய்யான பிரசாரம் காரணமாக மாணவா்கள் நீட் தோ்வு தொடா்பாக அச்சம் அடைந்து வருகின்றனா். கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளத்திலும், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபிலும் நீட் தோ்வு நடத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனா். நீட் தோ்வுக்கு மாணவா்களைத் தயாா்படுத்துவது அரசின் பொறுப்பு என்றாா்.