நாட்டு வெடிகுண்டுகள்தயாா் செய்த இருவா் கைது
By DIN | Published On : 16th September 2021 02:22 AM | Last Updated : 16th September 2021 02:22 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: காட்டுப் பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாா் செய்த 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பாளையம் வனப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி காட்டுப் பன்றிகள் வேட்டையாடப்படுவதாக சத்தியமங்கலம் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, கொண்டப்பநாயக்கன்பாளையம் காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக கையில் பையுடன் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, கொண்டப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மகேஸ்வரன், உக்கரம் மேட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த சம்பத்குமாா் என்பதும், இருவரும் சோ்ந்து சட்டவிரோதமாக அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகளை தயாா்செய்து வனப்பகுதியில் காட்டுப் பன்றிகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. அவா்களிடம் இருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள், வெடிகுண்டு தயாா் செய்வதற்கான மருந்துப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனா்.