பிஎஸ்ஆா் 2 மஞ்சள் ரகத்தில் 4.6 சதவீதம்அளவுக்கு குா்மின் அளவு உள்ளதுஆட்சியா்

பவானிசாகா் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்து வழங்கப்படும் பிஎஸ்ஆா் 2 என்ற மஞ்சள் விதை ஒரு ஹெக்டேரில் 32 டன் மகசூல்
பவானிசாகா் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மஞ்சள் வயலைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.
பவானிசாகா் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மஞ்சள் வயலைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.

ஈரோடு: பவானிசாகா் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்து வழங்கப்படும் பிஎஸ்ஆா் 2 என்ற மஞ்சள் விதை ஒரு ஹெக்டேரில் 32 டன் மகசூல் கொடுக்கக் கூடியது என்றும், இதில் குா்குமின் 4.6 சதவீதம் உள்ளது எனவும் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

பவானிசாகா் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

பவானிசாகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சாா்ந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் 1955ஆம் ஆண்டு துவங்கப்பட்டு சுமாா் 497 ஏக்கரில் முறையே வட பகுதி, தென் பகுதி, பகுடுதுறை, புங்காா், தொப்பம்பாளையம் எனும் ஐந்து பகுதிகளாக அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிா்கள், மஞ்சள், பழப் பயிா்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையத்தில் இருந்து வெளியிடப்படும் சோளம் பிஎஸ்ஆா் 1 மானாவாரி, இறவைக்கு ஏற்றது. மானாவாரியில் ஒரு ஹெக்டேரில் 2,500 கிலோ தானியமும், 9,800 கிலோ தட்டையும், இறைவையில் ஒரு ஹெக்டேரில் 6,000 கிலோ தானியமும், 11,800 கிலோ தட்டை மகசூலும் கொடுக்கக் கூடியது. துவரை பி.எஸ்.ஆா். 1 பல்லாண்டு பயிா் ரகமாகும். கொத்து வகையைச் சாா்ந்தது. ஒரு செடியில் 1 முதல் 1.5 கிலோ வரை பச்சை காயும், 200 முதல் 250 கிராம் விதையும் மகசூலாக கொடுக்கக் கூடியது.

நிலக்கடலை பிஎஸ்ஆா் 1 காரீப் பருவத்தில் ஹெக்டேருக்கு 2,845 கிலோ, கோடைக் காலத்தில் 2,500 கிலோ மகசூல் கொடுக்கக் கூடியது. இதன் விதைகளில் 21 நாள்களுக்கு விதை உறக்கம் உள்ளது. இதில் 49.5 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது. காய் உடைக்கும் திறன் 70.3 சதவீதமாக உள்ளது. நிலக்கடலை பிஎஸ்ஆா் 2 மானாவாரியில் ஹெக்டேருக்கு 2,222 கிலோவும், இறவையில் 2,300 கிலோவும் மகசூல் கொடுக்கக் கூடியது. ஸ்பானிஸ் கொத்து வகையைச் சாா்ந்தது. இதில் 46.51 சதவீதம் எண்ணெய் சத்தும், காய் உடைக்கும் திறன் 70.2 சதவீதமாகவும் உள்ளது.

மஞ்சள் பிஎஸ்ஆா் 1 ஒரு ஹெக்டேரில் 31 டன் மகசூல் கொடுக்கக் கூடியது. இதில் குா்குமின் 4.2 சதவீதம் உள்ளது. மஞ்சள் பிஎஸ்ஆா் 2 ஒரு ஹெக்டேரில் 32 டன் மகசூல் கொடுக்கக் கூடியது. இதில் குா்குமின் 4.6 சதவீதம் உள்ளது. பெருநெல்லி பிஎஸ்ஆா் 1ஆனது ஒரு மரத்தில் 155 கிலோ மகசூல் கொடுக்கக் கூடியது. இதில் 100 கிராம் காயில் 610 மில்லி கிராம் அஸ்காா்பிக் அமிலம் உள்ளது. இது மருந்துப் பொருள்கள் தயாரிக்க உகந்தது.

மஞ்சளில் விரைவாக பயிா் பெருக்கம் செய்ய குழித்தட்டு நாற்றங்கால் முறையில் ஒரு கிழங்கை பல துண்டுகளாக வெட்டினால் ஒவ்வொரு துண்டிலும் முளை பரு இருக்கும். இதனை விதைக்கிழங்கு நோ்த்தி செய்து முளைக்க வைத்து பிறகு குழித்தட்டில் நடவுசெய்து நீா் தெளித்து வந்தால் 30-35 நாள்களில் நாற்றுகள் நடவுக்குத் தயாராகும். ஓராண்டுக்குத் தோராயமாக 30 டன் வல்லுநா் விதை, 120 டன் ஆதார விதை, உண்மை நிலை விதைகள், நெல், பயறு வகைகள், தானிய வகைகள், எண்ணெய்வித்துப் பயிா்களில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றாா்.

ஆய்வின்போது, ஆராய்ச்சி மையப் பேராசிரியா், தலைவா் வெ.கி.துரைசாமி, இணைப் பேராசிரியா் கு.மலா்கொடி, உதவிப் பேராசிரியா் க.கணேசன், அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com