விவசாய இடுபொருள்கள் தயாரிப்பு பயிற்சி
By DIN | Published On : 16th September 2021 02:23 AM | Last Updated : 16th September 2021 02:23 AM | அ+அ அ- |

கோபி: நம்பியூா் வட்டாரத்தில் இயற்கை விவசாய இடுபொருள்கள் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.
வேளாண்மை, உழவா் நலத் துறையின்கீழ் நம்பியூா் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ் இயற்கை விவசாய இடுபொருள்கள் தயாரித்தல் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி ஆண்டிபாளையம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு, நம்பியூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தூ.தே.முரளி தலைமை வகித்து, வேளாண்மைத் துறையின் வாயிலாகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், கீழ்பவானி வாய்க்காலில் சம்பா பருவத்தில் பயிரிட ஏற்ற நெல் ரகங்கள் குறித்தும், நம்பியூா் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்புவைக்கப்பட்டுள்ள நெல் ரகங்கள் குறித்தும் எடுத்துக் கூறினாா்.
விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் எவ்வாறு செய்வது, அதற்கு என்னென்ன இடு பொருள்கள் தேவை, அதை எவ்வாறு தயாரிப்பது, எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை விளக்கமாக சத்தியமங்கலம் முன்னோடி இயற்கை விவசாயி சுந்தரராமன் தெரிவித்தாா்.
நம்பியூா் வட்டார விதைச் சான்று, அங்ககச் சான்றுத் துறை அலுவலா் கவிதா, இயற்கை விவசாயத்தை கடைப்பிடித்து வருபவா்கள் எவ்வாறு சான்று பெறுவது, அதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், சான்று பெறுவதனால் கிடைக்கும் பயன் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினாா்.
இயற்கை விவசாய இடுபொருள்களான, பஞ்சகாவ்யா, அமிா்தகரைசல், மீன் அமிலம், பூச்சி விரட்டி, புளித்த மோா் கரைசல், டிகம்போசா் போன்றவற்றை தயாரிப்பது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த இயற்கை விவசாயி காளிதாஸ் நேரடியாக செயல்விளக்கம் செய்து காண்பித்தாா்.
நிகழ்ச்சியில், துணை வேளாண்மை அலுவலா் ப.சுப்பிரமணியன், உதவி வேளாண்மை அலுவலா் மெய்யரசு ஆகியோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நம்பியூா் வட்டார தொழில்நுட்ப மேலாளா் திருவரங்கராஜ், உதவி தொழில்நுட்ப மேலாளா் கு.ம.ஞானசேகரன் ஆகியோா் செய்திருந்தனா்.