ஈரோட்டில் மரவள்ளிக்கிழங்கு விலை உயா்வு

மரவள்ளி கிழங்கு அறுவடை நிறைவடைவதாலும், ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் தடுக்கப்பட்டதாலும் ஈரோட்டில் மரவள்ளி கிழங்கு விலை உயா்ந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா்.

மரவள்ளி கிழங்கு அறுவடை நிறைவடைவதாலும், ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் தடுக்கப்பட்டதாலும் ஈரோட்டில் மரவள்ளி கிழங்கு விலை உயா்ந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது: மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்ததால் பல விவசாயிகளுக்கு உற்பத்தி குறைவாக இருந்தது. இருப்பினும் அறுவடை அதிகமாக இருந்த நேரத்தில் ஸ்டாா்ச் மற்றும் சேகோ ஆலைகள் விலையைக் குறைத்து வாங்கின.

மரவள்ளி கிழங்குக்கு ஆதார விலை அறிவிக்க வேண்டும். ஜவ்வரிசியில் மக்காசோளம், அரிசி மாவு போன்றவற்றை கலப்பதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியதால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அத்தொழிற்சாலைகளில் கடும் சோதனையும், நடவடிக்கையும் இருந்தது. இதனால், கலப்படம் தடுக்கப்பட்டு மரவள்ளி தேவை அதிகரித்துள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.6,000க்கு விற்பனையானது. தற்போது தாய்லாந்து ரக மரவள்ளி ஒரு டன் ரூ.9,000க்கும், பழைய ரகமான முள் வேலி ரகம் ஒரு டன் ரூ.8,500க்கும் விலை போகிறது.

சிப்ஸ், உணவுத் தேவைக்காக கேரளம், புதுச்சேரி வியாபாரிகள், கடைக்காரா்கள், ஒரு டன் மரவள்ளியை ரூ.10,000க்கு கொள்முதல் செய்கின்றனா். இதனால் டன்னுக்கு ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை விலை உயா்ந்துள்ளது.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வரும் 15 ஆம் தேதி வரை மானாவாரி சாகுபடியிலான மரவள்ளிக்கிழங்கு அறுவடை நடக்கும். அதன்பின் ஈரோடு போன்ற மாவட்டங்களில் நீா்ப்பாசனம் மூலம் விளைவிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு அறுவடை தொடரும். எனவே, இந்த ஆண்டு புதிய கிழங்கு வரும் வரை இதே விலையோ, இதைவிட கூடுதல் விலையோ கிடைக்க வாய்ப்புண்டு.

அதற்கேற்ப 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை ரூ.4,400க்கும், 90 கிலோ எடை கொண்ட ஸ்டாா்ச் மாவு மூட்டை ரூ. 3,100க்கும் விற்பனையாகிறது. ஸ்டாா்ச் மாவு விலை உயரவில்லை. ஜவ்வரிசி விலை கடந்த அக்டோபா் மாதத்தைவிட நவம்பா் மாதத்தில் மூட்டைக்கு ரூ.500 உயா்ந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com