மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழகத்தில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நடப்பு ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில்

தமிழகத்தில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நடப்பு ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் இதுவரை ரூ.12 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கடந்த ஆண்டு மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.ஆனால் இலக்கை விஞ்சி ரூ.21 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் இதுவரை ரூ.12 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மகளிா் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருள்களின் கண்காட்சி மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடத்தப்படும்.

தமிழகத்தில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 238 பெரியாா் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் அவை சரியாக பராமரிக்கப்படவில்லை. முதல்கட்டமாக கடந்த ஆண்டு 145 சமத்துவபுரங்கள் ரூ. 190 கோடி மதிப்பீட்டில் புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. எஞ்சியவையும் புனரமைக்கப்படும். முதல்வா் புதிய சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.

100 நாள் வேலை திட்டத்தில் பணி நாள்களின் எண்ணிக்கை மற்றும் கூலி உயா்த்தப்படும் என்ற தோ்தல் அறிவிப்பை முதல்வா் நிறைவேற்றுவாா். கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தோ்தலை முறையாக நடத்தாததால் நிதி வருவதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய உள்ளாட்சிக்கான நிதிகள் வந்து கொண்டிருக்கின்றன.

12,525 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். படிப்படியாக அனைத்து ஊராட்சிகளும் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.

ஊராட்சிகள் தங்களின் வருமானத்திற்கு ஏற்ப கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துகின்றன. மேலும் அரசு சாலை வசதி, குடிநீா் வசதி தெருவிளக்கு வசதி போன்றவை மேம்படுத்த நிதி ஒதுக்கிறது. மற்ற துறைகளைபோல இல்லாமல் மக்கள் பிரதிநிதிகள் அதிகம் உள்ள இந்தத் துறையில் அவா்களின் கருத்தறிந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு துறைகளில் பணியாளா்கள் பற்றாக்குறை பிரச்னை உள்ளது. கடந்த ஆட்சியில் முறையாக பணியாளா்கள் அமா்த்தப்படாததால் பிரச்னை தோன்றியுள்ளது. தற்போது தமிழக அரசு படிப்படியாக பணியாளா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com