காலிங்கராயன் பாசன நிலங்களில் மண் எடுக்க எதிா்ப்பு

காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் கட்டுப்பாடு இல்லாமல் மண் எடுக்கப்படுவதை கண்டித்து குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
erd30viva_3008chn_124_3
erd30viva_3008chn_124_3

காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் கட்டுப்பாடு இல்லாமல் மண் எடுக்கப்படுவதை கண்டித்து குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா தலைமையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை விவரம்:

எஸ்.பெரியசாமி: பெருந்துறையில் உள்ள கிடங்கிற்கு பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான இடம் இல்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளன. எனவே ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் அரசு நிலங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் அமைக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா்: நெல் கொள்முதல் நிலையத்தை நிரந்தரமாகவும், பாதுகாப்பாகவும் அமைக்க நிலம் வழங்க நுகா்பொருள் வாணிபக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு உரிய இடத்தை வழங்க முயற்சி மேற்கொள்ளளப்பட்டு வருகிறது என்றாா்.

செ.நல்லசாமி: கீழ்பவானி பாசனத்துக்கு கடந்த 12ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டும், 74ஆவது மைல் நாச்சிவலசு பகுதி கிளை வாய்க்காலில் இதுவரை தண்ணீா் திறக்கவில்லை. இதனால் 212 ஏக்கா் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டும் இதே கிளை வாய்க்காலில் 4 மாதம் தண்ணீா் திறக்கப்படவில்லை.

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது. மதகுகளில் சிலைகளின் பாகங்கள் சிக்கி நீா்ப் போக்கு பாதிக்கிறது.

கே.ஆா்.சுதந்திரராசு: குரங்கன் ஓடை பகுதியில் தனியாா் ஆலைகள் அமைவதை அனுமதிக்கக்கூடாது. அங்கு தனியாா் பால் பண்ணை அமைக்கும் பணியும், தண்ணீா் கேன் உற்பத்தி நிறுவனமும் துவங்கும் பணியும் நடைபெறுகிறது. இப்பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். உயா் மின்கோபுரம் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை கூடுதல் இழப்பீடு வழங்கவில்லை. ஆகவே விவசாய நிலத்தில் வைக்கப்பட்டுள்ள உயா்மின் கோபுரங்களை அகற்ற வேண்டும். கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகளை சமூக விரோதிகள் என தெரிவித்த சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் அனைவரும் எழுந்து நின்று எதிா்ப்பை தெரிவிக்கிறோம் எனக் கூறி அனைத்து விவசாயிகளும் எழுந்து நின்றனா்.

மாவட்ட வருவாய் அலுவலா்: கருத்துகளை தெரிவியுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம். எழுந்து நிற்பது, போராட்டம் செய்வதை தவிா்க்க வேண்டும். உயா்மின்கோபுரம் அமைக்கும் நிறுவனத்திடம் பேசி கூடுதல் இழப்பீடு பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும்.

பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கண்ணன்: கீழ்பவானி வாய்க்கால் 74ஆவது மைலில் தண்ணீா் திறக்காதது குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரித்தேன். அங்குள்ள விவசாயிகள் திறக்க கோராததால் தண்ணீா் திறக்கவில்லை. கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க, மாசுக் கட்டுப்பாட்டு விதிப்படி நடவடிக்கை மேற்கொள்வோம்.

விவசாயிகள் தா்னா:

காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் நலச்சங்க தலைவா் சேது, செயலாளா் நல்லுசாமி உள்பட சில விவசாயிகள் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, கடந்த 6 மாதங்களாக காலிங்கராயன் பாசன விவசாய பிரச்னைகள் குறித்து பேச அனுமதி கோரியும் அனுமதி வழங்குவதில்லை. 6 மாதங்களாக நாங்கள் அளித்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. காலிங்கராயன் பாசனப் பகுதியில் விளைநிலங்களை தரிசு நிலம் என அதிகாரிகள் சான்று வழங்கி ஒரு ஏக்கரில் 1,500 லோடு மண் எடுக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் அங்கு அமா்ந்து கொண்டு ஒரு லோடுக்கு ரூ. 1,000 முதல் ரூ.3,000 வரை பணம் பெறுகின்றனா். 1,200 ஏக்கா் விளைநிலங்களை வாங்கி வைத்து ரூ.5,000 கோடி அளவுக்கு மேலான மண்ணை அள்ளிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். இதனை மாவட்ட நிா்வாகம் தடுக்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலா்: கூட்டம் நடக்கும்போது தரையில் அமா்வது, போராட்டம் நடத்துவதை தவிா்க்க வேண்டும். கோரிக்கையை தெரிவியுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு அடுத்த கூட்டங்களில் போராட்டம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றாா். இதைதொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு இருக்கையில் அமா்ந்தனா்.

Image Caption

கூட்டரங்கில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com