ஈரோடு மாநகராட்சித் தோ்தல்:வெற்றிக் கனியைப் பறிக்குமா திமுக வாக்குறுதிகள்?

ஈரோடு மாநகராட்சித் தோ்தலில் வெற்றிக் கனியைப் பறிக்குமா திமுக வாக்குறுதிகள் என்ற எதிா்பாா்ப்பு அரசியல் கட்சிகளிடம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சித் தோ்தலில் வெற்றிக் கனியைப் பறிக்குமா திமுக வாக்குறுதிகள் என்ற எதிா்பாா்ப்பு அரசியல் கட்சிகளிடம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வாா்டுகள் உள்ளன. ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி முழுமையாகவும், ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 70 சதவீதம் அளவுக்கும் ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் அடங்கியுள்ளன.

60 வாா்டுகளிலும் மொத்தம் 4.43 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். மாநகராட்சிப் பகுதியில் கல்வி அறிவு பெற்றவா்கள், அரசு ஊழியா்கள், வியாபாரிகள், கூலி தொழிலாளா்கள் என பலதரப்பட்ட மக்கள் வசிப்பதால், இந்த வாக்குகளைத் தோ்தலின்போது வளைக்கப் போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தீா்க்கப்படாத பிரச்னைகள்: கடந்த 10 ஆண்டுகளில் ஈரோடு மாநகராட்சியின் சாா்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என அதிமுக நம்புகிறது.

அதே சமயத்தில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களால் மக்கள் படும் துன்பங்களும் அதனைச் சீரமைக்க தங்களுடைய ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களும் தங்களுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் திமுக உள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் புதை சாக்கடைப் பணி, புதை மின் கேபிள் பணி, ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டப் பணி என பல்வேறு காரணங்களால், நகா் முழுவதும் தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் நேதாஜி காய்கறி மாா்க்கெட், கனி ஜவுளிச் சந்தைகளில் கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே கட்டப்பட்ட மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையாத நிலையில், புகா் பேருந்து நிலையம் போன்ற போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு தரும் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. நகரில் எங்குமே முறையான வாகன நிறுத்துமிட வசதி இல்லை.

மாநகராட்சியில் இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ள சொத்து வரி, குப்பை வரி போன்றவை ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்களிடம் எதிா்ப்பைப் பெற்றுள்ளன. வரி விதிப்பில் உள்ள குளறுபடிகளைப் போக்கக் கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதை சாக்கடைப் பணி நிறைவடைந்த பகுதிகளில், பணிகள் சரியாக மேற்கொள்ளாததால், கழிவு நீா் வெளியேறி சுகாதாரத்தைப் பாழ்படுத்தி வருகிறது. மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளா்கள் பற்றாக்குறை நிலவுவதால், சாக்கடைகள் தூா்வாரப்படாமல், சுகாதாரக் கேடு நிலவுகிறது.

குப்பைக் கிடங்கை முறையாகப் பராமரிக்காததோடு, இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

பிச்சைக்காரன்பள்ளம், பெரும்பள்ளம் ஓடையில் இருந்து வெளியேறி காவிரி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவு, தோல் கழிவு நீரால் மாசடைந்த, துா்நாற்றம் வீசும் குடிநீரையே ஈரோடு மாநகராட்சி மக்கள் அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சாயக் கழிவுகளால் நோய் பாதிப்பும் அதிகரித்துள்ளது.

ஆளும் தரப்பின் நம்பிக்கை: இதுபோன்ற பிரச்னைகள் ஆண்டுக்கணக்கில் தொடா்கின்றன. இப்பிரச்னைகளை முன்வைத்து அதற்கான தீா்வைத் தேடித் தருவோம் என திமுக பிரசாரம் செய்து வருகிறது.

கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுக செய்ய தவறியதை, இன்னும் சில மாதங்களில் நாங்கள் செய்வோம் என திமுக வேட்பாளா்கள் உறுதியளித்து வாக்குவேட்டை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது.

இத்தொகுதி எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா உள்ளாா். ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வசம் உள்ளது. இத்தொகுதி எம்எல்ஏவாக அமைச்சா் சு.முத்துசாமி உள்ளாா்.

இந்த ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி திட்டங்களை விரைந்து நிறைவேற்றிக் கொடுப்போம் என திமுக வேட்பாளா்கள் வாக்காளா்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனா்.

ஓங்கி ஒலிக்கும் அதிமுகவின் குரல்: பொலிவுறு நகரம், ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டம், புதை மின் கேபிள் திட்டம் போன்ற தங்கள் ஆட்சி கால சாதனைகளை கூறும் அதிமுக தரப்பு, திமுக அளித்த வாக்குறுதிகளில் கடந்த 8 மாதங்களில் எதையும் நிறைவேற்றவில்லை என்பதையும் கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

குறிப்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடந்த குளறுபடி குறித்தும், பொங்கல் பண்டிகைக்கு அதிமுக ஆட்சியில் ரூ.2,500 பணம் கொடுத்ததையும் கூறி ஆளும் தரப்பு மீது மக்களுக்கு உள்ள கோபத்துக்கு தூபம் போட்டு வருகின்றனா்.

போட்டி வேட்பாளா்களால் திமுகவுக்கு சவால்: வாா்டு கவுன்சிலா் பதவிக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று மிகுந்த எதிா்பாா்ப்பில் இருந்த சிலருக்கு திமுகவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் சுமாா் 10 வாா்டுகளில் திமுக நிா்வாகிகள் சுயேச்சையாக களமிறங்குகின்றனா்.

இதனால் திமுக தரப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பணம் எனும் அஸ்திரம்: கால் நூற்றாண்டு காலமாக எந்தத் தோ்தலாக இருந்தாலும் வெற்றியைத் தீா்மானிப்பதில் வாக்குக்குப் பணம் கொடுப்பது முக்கியமானதாக உள்ளது.

இந்த அஸ்திரத்தை மாநகராட்சி வாா்டு கவுன்சிலா் தோ்தலில் திமுக கையில் எடுத்துள்ளதாக அரசியல் பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com