அந்தியூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக அதிருப்தி வேட்பாளர் வெற்றி: மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிருப்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
அந்தியூர் பேரூராட்சி தலைவராக தேர்வு பெற்ற எம்.பாண்டியம்மாள் பதவியேற்றுக் கொண்டார்.
அந்தியூர் பேரூராட்சி தலைவராக தேர்வு பெற்ற எம்.பாண்டியம்மாள் பதவியேற்றுக் கொண்டார்.

பவானி: அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிருப்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்பதவி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், திமுகவின் இச்செயலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்தியூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில், திமுக 13 வார்டுகளிலும், அதிமுக 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் உமாசங்கர் தலைமையில் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. திமுக சார்பில் 15-வது வார்டில் வெற்றி பெற்ற எம்.பாண்டியம்மாள், 3-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெற்றி பெற்ற கீதா சேகர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். கீதா சேகருக்கு முன்மொழிய ஆதரவு கிடைக்கவில்லை.

அதிமுக கவுன்சிலர்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை. இதனால், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் எம்.பாண்டியம்மாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திமுக கூட்டணியில் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்சித் தலைமையின் உத்தரவு கட்டுப்படாமல் திமுகவினரே தலைவர் பதவியை கைப்பற்றிக் கொண்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்தியூர் தாலுக்கா செயலாளர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேரூராட்சி அலுவலக பகுதியில் பரபரப்பு நிலவியது.

திமுக-வின் செயலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக-வின் செயலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் வீட்டை முற்றுகையிட்ட திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுகவுக்கு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திமுகவினர் ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

திமுக கவுன்சிலர்கள் ஏகமனதாக திமுக அதிருப்தி  வேட்பாளரை தலைவராக தேர்ந்தெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com