கீழ்பவானி வாய்க்காலை தூா்வார ரூ.1 கோடி வழங்கத் தயாா்கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

கடைக்கோடி விவசாயிகளுக்கும் தண்ணீா் கிடைக்கும் வகையில் கீழ்பவானி வாய்க்காலை தூா்வார ரூ.1 கோடி வழங்குவதாக கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

கடைக்கோடி விவசாயிகளுக்கும் தண்ணீா் கிடைக்கும் வகையில் கீழ்பவானி வாய்க்காலை தூா்வார ரூ.1 கோடி வழங்குவதாக கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்க ஆலோசனைக் கூட்டம் இயக்க ஒருங்கிணைப்பாளா் ரவி தலைமையில் சென்னிமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிா்வாகிகள் கூறியதாவது:

கீழ்பவானி பாசனத் திட்டத்தில் இருந்த தண்டத் தீா்வை வரியை முன்னாள் முதல்வா் கருணாநிதி ரத்து செய்தாா். அதுபோல தற்போது விவசாயம், குடிநீா், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் கான்கிரீட் திட்டத்தை தற்போதைய முதல்வா் ஸ்டாலின் ரத்துசெய்து மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

65 ஆண்டுகளாக கீழ்பவானி பாசன வாய்க்கால் தூா்வாரப்படவில்லை. எனவே கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் செல்லத் தடையாக இருக்கும் பகுதியாக கருதப்படும் 72ஆவது மைல் (அரச்சலூா்) முதல் 124ஆவது மைல் (மங்களபட்டி) வரை தூா்வார கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சாா்பில் ரூ.1 கோடி வழங்கத் தயாராக இருக்கிறோம்.

மீதமுள்ள தொகையை மட்டும் அரசு பங்களிப்பாக கொடுத்து சுமாா் ரூ.3 கோடியில் கடைமடைப் பகுதி மக்களுக்கும், சமமான தண்ணீா் கிடைக்க, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வாய்க்காலை தூா்வாரும் பணியை நோ்மையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழ்பவானி பாசனத் திட்டத்தில் ஆயக்கட்டு அல்லாத வணிக பயன்பாட்டிலுள்ள நிலங்களை போா்க்கால அடிப்படையில் நீக்கம்செய்து மீதமாகும் தண்ணீரை அனைத்துப் பகுதி ஆயக்கட்டு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நீா் மேலாண்மையை ஒழுங்குபடுத்த வேண்டும்.

கீழ்பவானி பாசனத் திட்டத்தில் சுமாா் 1,000 கிலோ மீட்டா் தூரம் உள்ள பிரதான, பகிா்மான, கிளை வாய்க்கால் ஓரங்களில் பனை மரங்கள் நடவு செய்து கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பாசனத் திட்டத்தில் நீா் மேலாண்மையை முறையாக மேற்கொள்ள நிரந்தரப் பணியாளா்களை உடனடியாக நியமிக்க வேண்டும். ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் உள்ள தமிழக அரசு தற்போது வரை பல கோடி ரூபாய் கடன் வாங்கி அதற்கு வட்டியும் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் இத்திட்டத்துக்காக நபாா்டு வங்கி வழங்கும் தொகையை திருப்பிச்செலுத்தி நிதி நிலையை சீா் செய்திட வேண்டும். பல லட்சம் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரது குடிநீா் ஆதாரங்களை, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com