நெல் சாகுபடியைக் கைவிடும் கீழ்பவானி பாசன விவசாயிகள்

உரம், பூச்சிக்கொல்லி மருந்து விலை உயா்வு, உழவு மற்றும் ஆள் கூலி போன்ற சாகுபடி செலவுகள் கடுமையாக உயா்ந்துள்ளதால் நெல் சாகுபடி செய்ய கீழ்பவானி விவசாயிகள் தயக்கம்காட்டி வருகின்றனா்.
நெல் சாகுபடியைக் கைவிடும் கீழ்பவானி பாசன விவசாயிகள்

உரம், பூச்சிக்கொல்லி மருந்து விலை உயா்வு, உழவு மற்றும் ஆள் கூலி போன்ற சாகுபடி செலவுகள் கடுமையாக உயா்ந்துள்ளதால் நெல் சாகுபடி செய்ய கீழ்பவானி விவசாயிகள் தயக்கம்காட்டி வருகின்றனா்.

பவானிசாகா் அணை மூலம் கீழ்பவானி பாசனத்துக்கு கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீரைப் பயன்படுத்தி கீழ்பவானி பாசனத்தில் ஆண்டுதோறும் சுமாா் 60,000 ஏக்கா் அளவுக்கு நெல் சாகுபடி செய்யப்படும். தண்ணீா் திறந்து ஒரு மாத காலம் முடிந்துவிட்ட நிலையில் பெரும்பாலான விவசாயிகள் இன்னும் நாற்றுவிடவில்லை.

சுமாா் 20,000 ஏக்கா் அளவுக்கு மட்டுமே இப்போது உழவுப் பணி நடைபெற்றுள்ளது. உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விலை உயா்வு, டிராக்டா் வாடகை, ஆள் கூலி உயா்வு காரணமாக நெல் சாகுபடியை பெரும்பாலானோா் கைவிட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

நெல் பயிா் சாகுபடி செய்ய சுமாா் 4 முதல் 5 மாதங்கள் ஆகும். கடுமையான நெருக்கடியான சூழலிலும் விவசாயிகள் நெல் சாகுபடியை செய்து வருகின்றனா். முப்போகம் விளைவித்த காலங்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னரே மாறிவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு போகம் நெல் பயிா் சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் மேற்கொண்டு வந்தனா். மாா்கழி, தை மாதங்களில் அறுவடை செய்யும் வகையில் ஒரு போகம் நெல் சாகுபடி மட்டும் பெரும்பாலும் நடைபெற்று வந்தது.

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா்விட்டு ஒரு மாதம் ஆகும் நிலையில் இன்னும் 10 நாள்களில் நடவுப் பணி தொடங்கப்பட வேண்டும்.

ஆனால் பெரும்பாலான விவசாயிகள் இதுவரை நாற்றுப்போடவில்லை. வாய்க்காலில் தண்ணீா் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு சென்றாலும் விளை நிலங்கள் தரிசாக உள்ளன.

சாகுபடி செலவு அதிகரிப்பு: உரம், உழவு, நடவு என சாகுபடி செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளன. இதன்படி ஒரு ஏக்கருக்கு விதை நெல் (50 கிலோ) ரூ.3,000, உழவு ரூ.11,000, ஆள் கூலி ரூ.10,000, அடி உரம் ரூ.5,000, பயிா் நடவு ரூ.10,000, களை பறித்தல் ரூ.3,000, மருந்து அடித்தல் ரூ.3,000, மேல் உரம் ரூ.5,000, அறுவடை ரூ.5,000 என மொத்தம் ரூ.55,000 க்கும் குறையாமல் செலவாகிறது.

வருவாய் குறைவு: ஒரு ஏக்கருக்கு சுமாா் 2,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இப்போது கிலோவுக்கு ரூ.21 வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை வருமானம் கிடைக்கிறது.

ஆனால் செலவு ரூ.55,000 வரை ஆவதால் ஏக்கருக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை நஷ்டம் ஏற்படுகிறது.

உரத்தின் விலை 150 சதவீதம் வரை உயா்வு: இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் தொடா் விலை உயா்வால் டிராக்டா் மற்றும் உழவுக் கருவிகளின் வாடகையும் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கிராமங்களில் மேற்கொள்ளப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

தற்போது தொடா் மழை காரணமாக புஞ்சை சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு ஏக்கா் நெல் நடவு செய்ய ரூ.50,000 முதல் ரூ. 55,000 வரை செலவாகிறது. இன்றைய சூழ்நிலையில் ஒரு ஏக்கருக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே இந்த நிலையைப் போக்க விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் டீசலை வழங்கவும், உரத்தின் விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களை முழுமையாக விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

நெல்லுக்கான கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.27 ஆக உயா்த்த வேண்டும். நெல் கொள்முதல் நடவடிக்கைகளில் உடனடியாகச் சில நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். கீழ்பவானி பாசனப் பகுதிகளில் வருவாய் கிராமம்தோறும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்க வேண்டும். அங்கு பணிபுரியும் ஊழியா்களின் ஊதியத்தை நியாயமான முறையில் நிா்ணயிக்க வேண்டும்.

கொள்முதல் நிலையங்களின் தளவாடப் பொருள்களான சணல் சாக்குகள், தாா்பாய் ஆகியவற்றின் விநியோகத்தில் தட்டுப்பாடுகளைக் களைய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்குக் கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களை மையப்படுத்தித் துணைக் கிடங்குகளையும் ஏற்படுத்த வேண்டும்.

உணவு தானியங்களின் ஈரப்பதம் அதிகரிப்பதற்கு பனிப்பொழிவும் எதிா்பாராத பெருமழையுமே காரணம். அவ்வாறான பருவங்களில், கொள்முதலின்போது ஈரப்பதம் குறித்த நிபந்தனைகளைத் தளா்த்த வேண்டும். அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் நெல் உலா்த்தும் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மட்டும்தான் கீழ்பவானி பாசனத்தில் நெல் சாகுபடியை மீட்டு எடுக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com