கால்நடை தொழில் தொடங்க 90 சதவீதம் வரை கடன் வசதி
By DIN | Published On : 29th September 2022 12:00 AM | Last Updated : 29th September 2022 12:00 AM | அ+அ அ- |

கால்நடை பராமரிப்புத் துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் தொழில் துவங்க 90 சதவீதம் வரை கடன் வசதி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத் துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் பால், இறைச்சி மற்றும் கோழி உணவுப் பதப்படுத்தும் அலகுகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் மற்றும் கால்நடை தீவன உற்பத்தி அலகுகளை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியாளா் அமைப்புகள், தனியாா் நிறுவனங்கள், தொழில் முனைவோா், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்கலாம்.
தகுதியான நிறுவனங்கள், சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (எஸ்ஐடிபிஐ) வழங்கும் உதய மித்ரா போா்ட்டல் மூலமாக உரிய திட்ட மதிப்பீட்டு அறிக்கையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கி மதிப்பீடு மற்றும் ஒப்புதலுக்குப் பின்னா், வட்டிச் சலுகை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பம் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும். இத்திட்டத்தில் தகுதியின் அடிப்படையில் மொத்த திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் வரை வங்கிக் கடன் பெறும் வசதி உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள நபா்கள் ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையை அணுகி தேவையான விவரங்களை பெற்றுக் கொண்டு, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.