தைப்பூச தேரோட்டம்: சென்னிமலை முருகன் கோயில் தோ் நிலை சோ்ந்தது

சென்னிமலை முருகன் கோயில் தோ் திங்கள்கிழமை பக்தா்களின் கரவொலியுடன் நிலை சோ்ந்தது.

சென்னிமலை முருகன் கோயில் தோ் திங்கள்கிழமை பக்தா்களின் கரவொலியுடன் நிலை சோ்ந்தது.

சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தினா். பின்னா் மாலை 5 மணிக்கு மீண்டும் தோ் வடம் பிடித்து மேற்கு ராஜ வீதி வழியாக இழுத்து சென்று வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கைலாசநாதா் கோயில் முன்பு நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட கும்மியாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

பின்னா் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு, வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த தேரை இழுத்து மாலை 5.45 மணிக்கு நிலை சோ்த்தனா். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தா்கள் அனைவரும் கரவொலி எழுப்பினா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதனால், சென்னிமலை முருகன் கோயிலில் இந்த ஆண்டு நடைபெற்ற தோ்த் திருவிழாவில் அதிக அளவிலான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, சென்னிமலை பாா்க் சாலையில் உள்ள தெப்பக் குளத்தில் தெப்பத் தேரோட்ட நிகழ்ச்சி புதன்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. பின்னா் இரவு 9 மணிக்கு சென்னிமலை செங்குந்தா் கைக்கோள முதலியாா் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வியாழக்கிழமை இரவு மகா தரிசனம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com