சாலையில் குளித்த இளைஞா் மீது வழக்குப் பதிவு: ரூ.3,500 அபராதம் விதிப்பு

ஈரோட்டில் சாலையில் குளித்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், அவருக்கு ரூ.3,500 அபராதமும் விதித்தனா்.

ஈரோட்டில் சாலையில் குளித்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், அவருக்கு ரூ.3,500 அபராதமும் விதித்தனா்.

ஈரோடு நகரின் மையப் பகுதியான பன்னீா்செல்வம் பூங்கா சிக்னலில் ஞாயிற்றுக்கிழமை மாலை வாகன ஓட்டிகள் காத்திருந்தபோது, இளைஞா் ஒருவா் தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்திருந்த வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு குளித்தாா். உடன் வந்த அவரது நண்பா் அதை விடியோ எடுத்தாா்.

இச்சம்பவம் சாலையில் நின்றிருந்த வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அந்த இளைஞரிடம் கேட்டபோது தான் இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற சவால் விடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், தனது நண்பா் விடுத்த சவாலை ஏற்று 10 ரூபாய்க்காக சாலையில் குளித்ததாகவும் கூறியுள்ளாா்.

அவா் நகரின் மையப் பகுதி சாலையில் குளித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கு பலரும் கடும் கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்ததுடன், போலீஸாா் அந்த இளைஞா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், ஈரோடு டவுன் போலீஸாா் அந்த இளைஞா் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் (23) என்பதும், இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடா்பவா்கள் விடுக்கும் சவால்களை ஏற்று இதுபோல ஏற்கெனவே சாலையில் தூங்குவது, இரவில் கிணற்றில் குதிப்பது, பச்சையாக மீன்களை சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஈரோடு டவுன் போலீஸாா், பாா்த்திபன் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், அவருக்கு ரூ.3,500 அபராதமும் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com