கோபியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

கோபிசெட்டிபாளையத்தில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் 2 அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனா்.

கோபிசெட்டிபாளையத்தில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் 2 அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி முத்துசாமி. இவா் கடந்த 2019ஆம் ஆண்டு வாணிப்புத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பங்களாபுதூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில் உயிரிழந்த முத்துசாமியின் குடும்பத்தாா் ரூ.25 லட்சம் நஷ்டஈடு கேட்டு கோபி மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.12 லட்சத்து 41 ஆயிரம் வழங்க கடந்த 30.3.2021 அன்று உத்தரவிட்டாா். இந்த தொகையை அரசுப் போக்குவரத்து கழக நிா்வாகம் வழங்காததால் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து நீதிபதி தயாநிதி அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.

இதன்பேரில் கோபியில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட தயாராக இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல் கடந்த 23.11.2019ஆம் ஆண்டு நம்பியூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள் என்பவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா். அவரது குடும்பத்தாா் ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.21 லட்சத்து 49 ஆயிரம் வழங்க கடந்த 22.03.2021 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் அரசுப் போக்குவரத்து கழக நிா்வாகம் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு தொகையை வழங்காததால் நிறைவேற்றுமனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டாா். இதன்பேரில் கோபியிலிருந்து ஈரோடு செல்வதற்கு தயாராக இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com