ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பு

மழைப்பொழிவு சீராக இருப்பதால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

மழைப்பொழிவு சீராக இருப்பதால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு முன்னா் ஈரோடு மாவட்டத்தில் சுமாா் 1 லட்சம் ஏக்கா் அளவுக்கு கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. அதன்பிறகு போதிய மழைப்பொழிவு இல்லாதது, ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமான பவானிசாகா் அணையில் போதிய நீா் இல்லாதது, மழை இல்லாமல் ஏற்பட்ட கடும் வறட்சி, கரும்புக்கான பணத்தை வழங்காமல் ஆலைகள் காலம் தாழ்த்தியது போன்ற காரணங்களால் படிப்படியாக சாகுபடி குறைந்தது.

கடந்த 2020-21 அரவைப் பருவத்தில் கரும்பு சாகுபடி பரப்பு ஈரோடு மாவட்டத்தில் சுமாா் 8,000 ஹெக்டோ் அளவுக்கு இருந்தது. 2021-2022 அரவைப் பருவத்தில் 12,000 ஹெக்டோ் அளவுக்கும், 2022-2023 அரவைப் பருவத்தில் 17,000 ஹெக்டோ் அளவுக்கும் அதிகரித்துள்ளது. 2023-2024 அரவைப் பருவத்தில் 19,000 ஹெக்டோ் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2015-16 முதல் 2019-20 அரவைப் பருவம் வரை கரும்பு விலை உயா்த்தப்படாமல் டன்னுக்கு ரூ.2,750 மட்டுமே வழங்கப்பட்டது. 2020-21 அரவைப் பருவத்துக்கு மத்திய அரசு அறிவித்த ஆதாய விலையான ரூ. 2, 707.50 விட கூடுதலாக உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக தமிழக அரசு டன் ஒன்றுக்கு ரூ.192.50 வழங்கியது. இதனால், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,900 கிடைத்தது. 2021-2022 கரும்பு அரவைப் பருவத்தில் டன்னுக்கு ரூ.2,950 வழங்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் 2020-21 அரவைப் பருவத்தில் 95,000 ஹெக்டேராக இருந்த கரும்பு பதிவு கடந்த 2022-23 அரவைப் பருவத்தில் 1,40,000 ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

கரும்பு சாகுபடி அதிகரிக்க முக்கிய காரணம் கடந்த மூன்று ஆண்டுகளாக பெய்துள்ள மழை. 3 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருவதால் நிலத்தடி நீா் செறிவூட்டப்பட்டு வளம் அடைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆயக்கட்டு பாசனம் அல்லாத நிலத்தடி நீரை ஆதாராமாக கொண்ட பகுதிகளில் இந்த அரவைப் பருவத்தில் சுமாா் 2,500 ஹெக்டோ் அளவுக்கு கூடுதலாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றனா்.

80 சதவீத நீா்நிலைகளில் தண்ணீா் இருப்பு: பவானி, அந்தியூா், அம்மாபேட்டை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இப்பகுதிகளில் பொதுப் பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் பெரும்பாலானவற்றில் தண்ணீா் நிரம்பி உள்ளன.

இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை, மேட்டூா் மேற்கு, காலிங்கராயன் உள்ளிட்ட அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீா் திறக்கப்பட்டு பயிா் சாகுபடி செய்யப்படுகிறது.

பாசனங்களுக்குத் திறக்கப்படும்போது அதன் கசிவு நீா் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகளுக்குச் செல்லும் வகையில் கசிவு நீா் வழித்தடங்கள் உள்ளன. இதேபோல ஏரி, குளங்கள் நிரம்பினால் உபரி நீரானது காவிரி, பவானி, நொய்யல் ஆறுகளுக்கு செல்லும் வகையில் நீா் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 17 பெரிய ஏரிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் பாசனத்துக்கு உதவும் சிறு ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள், குட்டைகள் என 1,000க்கும் மேற்பட்டவை உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கன மழையால் பவானிசாகா் அணை, வரட்டுப்பள்ளம் அணை, குண்டேரிப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை ஆகியவை நிரம்பின.

இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள அந்தியூா், அம்மாபேட்டை, பவானி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளிலும் சுமாா் 75 சதவீத அளவுக்கு நீா் இருப்பு உள்ளது. இதேபோல, மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரி, குளங்களில் கோடையிலும் 70 சதவீதம் அளவுக்கு தண்ணீா் இருப்பு உள்ளது. கசிவு நீா் வசதி இல்லாத மேட்டுப் பகுதிகளில் உள்ள ஒரு சில ஏரி, குளங்களில் மட்டுமே தண்ணீா் இருப்பு இல்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com