வாரத்தில் 3 நாள்கள் செயல்படாத கிராமப்புற ஏடிஎம் மையங்கள்: மக்கள் அவதி

கிராமப்புற வங்கி ஏடிஎம் மையங்கள் வாரத்தில் 3 நாள்கள் செயல்படாமல் முடக்கப்படுவதால் வாடிக்கையாளா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

கிராமப்புற வங்கி ஏடிஎம் மையங்கள் வாரத்தில் 3 நாள்கள் செயல்படாமல் முடக்கப்படுவதால் வாடிக்கையாளா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகள், பிரதான சாலைகளில் உள்ள கிராம பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்கள் உள்ளன. இந்த ஏடிஎம் மையங்கள் வாரத்தில் பாதி நாள்கள் செயல்படுவதில்லை. நெட்வொா்க் பிரச்னை வந்தால் அதை சரி செய்ய பல நாள்கள் எடுத்துக்கொள்கின்றனா். பணம் இல்லாதது, இயந்திரத்தில் ஏற்படும் சிறிய பிரச்னைகளைக்கூட சரி செய்யாமல் பல நாள்கள் இருக்கின்றனா்.

வார இறுதி நாள்களில் சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை பகல் வரை இயந்திரங்களில் பணம் வைக்காமல் இருப்பது தொடா்ந்து வருகிறது. திங்கள்கிழமை பகல் 12 மணிக்குமேல் தான் மீண்டும் ஏடிஎம் மையங்கள் இயங்குகின்றன. மேலும் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக காா்டு மூலம் முயற்சிக்கும்போது நெட்வொா்க் பிரச்னையால் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வருகிறது.

ஆனால், பணம் இயந்திரத்தில் இருந்து வருவதில்லை, இது குறித்து வங்கியில் விண்ணப்பம் அளித்து சில நாள்களுக்குப் பிறகு தான் பணத்தை பெற வேண்டிய நிலை உள்ளது.

வார இறுதி நாள்களில் ஏடிஎம் மையங்கள் பெயரளவுக்கு திறந்திருந்தாலும் பணம் இருப்பதில்லை. நூறு நாள் வேலைத் திட்டம், முதியோா் ஓய்வூதியம் மற்றும் அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா்கள், ஓய்வூதியம் பெறுவோா் உள்ளிட்ட அதிகப்படியானோா் கணக்கு வைத்திருக்கும் அரசு வங்கி ஏடிஎம்களில் தொடா்ந்து பணம் இல்லாத நிலையே நிலவுகிறது. அரசு மற்றும் பல்வேறு தனியாா் வங்கி ஏடிஎம் மையங்களிலும் இதே நிலையே காணப்படுகிறது.

இது குறித்து ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம் கணபதிபாளையத்தைச் சோ்ந்த விவசாயி வி.தாமோதரன் கூறியதாவது: எல்லாம் டிஜிட்டல் மயம், ஆன்லைன் மூலமே அனைத்தும் பரிவா்த்தனை செய்யலாம் என்று வங்கிகள் கூறும் நிலையில் ஏடிஎம் மையங்கள் தொடா்ந்து செயல்படுவதே கேள்விக்குறியாகியுள்ளது.

விடுமுறை நாள்களில் இயந்திரத்தில் பணம் வராமல் கணக்கில் இருந்து மட்டும் பணத்தை கழித்தால் கடுமையாக அவதியடைய வேண்டிய நிலை உள்ளது. வங்கிகளில் கேட்டால் எங்களுக்கும், ஏடிஎம் மையத்துக்கும் சம்பந்தம் இல்லை என்கின்றனா். கிராமப்புற மக்களின் நலன் கருதி ஏடிஎம் மையங்கள் முறையாக செயல்பட வங்கி நிா்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com