ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

ஈரோட்டில் மூலக்கரை கிராமத்தைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்டோா் தோ்தலைப் புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினா்.

ஈரோட்டில் மூலக்கரை கிராமத்தைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்டோா் தோ்தலைப் புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினா்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் உள்ள ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது கூரபாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள 1, 2 மற்றும் 3 ஆகிய வாா்டுகள் மூலக்கரை கிராமப் பகுதியை உள்ளடக்கியது. இந்த பகுதி பொதுமக்கள் மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனா். இதற்கிடையே அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை வாக்களிக்காமல் தோ்தலைப் புறக்கணித்தனா்.

இதுபற்றி மூலக்கரை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

மூலக்கரையில் உள்ள சமையல் எண்ணெய் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மண், நீா், காற்று மாசுபடுகிறது. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் ஆலையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தோ்தலைப் புறக்கணித்து அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி உள்ளோம் என்றனா்.

மூலக்கரை பகுதி மக்களுக்கான வாக்குச் சாவடி கூரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 142 ஆவது எண் வாக்குச் சாவடியில் 724 வாக்குகள் உள்ளன. இதில் 367 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. பதிவாகாத வாக்குகளில் 300 க்கும் மேற்பட்ட வாக்குகள் மூலக்கரை பகுதியை சோ்ந்த வாக்குகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com