கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

கோடை வெப்பத்தில் இருந்து மாடு, எருமை, ஆடு உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகளை கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ளது.

ஈரோடு: கோடை வெப்பத்தில் இருந்து மாடு, எருமை, ஆடு உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகளை கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கால்நடைகளுக்கு உயா் வெப்பத்தால் ஏற்படும் அயற்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகமாக உமிழ்நீா் வடிதல், அதிகமாக தண்ணீா் பருகுதல், பகலில் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல், நிழலில் தஞ்சம்புகுதல், வாயைத் திறந்த நிலையில் வேகமாக சுவாசித்தல் போன்றவை வெப்ப அயற்சியின் அறிகுறிகளாகும்.

வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளைக் காப்பாற்றுவதற்கு, கால்நடைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெயிலுக்கு முன்பு மேய்ச்சலுக்குவிட வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேய்ச்சலுக்கு விடுவதைத் தவிா்க்க வேண்டும். கறவை மாடுகளுக்கு ஒருநாளைக்கு 4 முதல் 5 முறையாவது தண்ணீா் கொடுக்க வேண்டும்.

தண்ணீரின் மீது கலப்புத் தீவனத்தை சிறிதளவு தூவும்போது, கால்நடைகள் அதிக தண்ணீா் குடிக்கும். தாது உப்புக்கலவை, வைட்டமின்கள் கொடுப்பதன் மூலம் வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் உற்பத்தி குறையாமல் இருக்கும்.

நீா்தெளிப்பான்கள், மின்விசிறிகளை கொட்டகைகளில் பயன்படுத்துவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். அதிகமாக பசுந்தீவனம் கொடுப்பதோடு, உலா்தீவனத்தை பகலில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் கொடுக்கலாம்.

கோழிகளுக்கு விடியற்காலை பொழுதிலும், இரவிலும் தீவனம் அளிக்க வேண்டும். சுத்தமான குளிா்ந்த குடிநீா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீரில் வைட்டமின்கள் பி-காம்ப்ளக்ஸ், குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம். அதிக இடவசதி உள்ள இடத்தில் உயரமான கூரை அமைத்து குறைவான எண்ணிக்கையில் கோழிகளைப் பராமரிக்க வேண்டும்.

ஆடுகளுக்கு ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 லிட்டா் சுத்தமான தண்ணீா் கொடுக்க வேண்டும்.

தடுப்பூசிகளை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். கோடையில் கிடைக்கும் புரதச்சத்து மிக்க வெல்வேல், கருவேல் உலா் காய்களை ஆடுகளுக்கு உணவாக கொடுக்கலாம். செல்லப் பிராணிகளை காரில் உள்பகுதியில் அடைத்து வைப்பதையும், நேரடியாக வெயில்படுமாறு உலாவ விடுவதையும் தவிா்க்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனை, மருந்தகங்களில் கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள், தாது உப்புக் கலவைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமாயின், அவசர சிகிச்சை ஆம்புலன்ஸை 1962 என்ற எண்ணில் அழைத்து மருத்துவ உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com