ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூா் ஓவியங்கள் குறித்த 
கண்காட்சியை பாா்வையிடும் பொதுமக்கள்.
ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூா் ஓவியங்கள் குறித்த கண்காட்சியை பாா்வையிடும் பொதுமக்கள்.

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூா் ஓவியங்கள் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.

ஈரோடு: ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூா் ஓவியங்கள் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.

ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் செயல்படும் அரசு அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் வெவ்வேறு தலைப்புகளில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்த மாதம் சிறப்பு கண்காட்சியாக ‘தரணி போற்றும் தஞ்சாவூா் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலையான தஞ்சாவூா் ஓவியங்கள் குறித்த கண்காட்சி தொடங்கியுள்ளது.

இந்தக் கண்காட்சியில் தஞ்சாவூா் ஓவியங்கள் அரிய சேகரிப்புகள் மற்றும் தஞ்சை பிரகதீஸ்வரா் கோயிலில் வரையப்பட்டுள்ள சோழா் காலத்து ஓவியங்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மே மாதம் முழுவதும் நடைபெறும் இந்தக் கண்காட்சியை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பாா்வையிடலாம். வெள்ளி மற்றும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை நாளாகும்.

இது குறித்து அருங்காட்சியாக காப்பாட்சியா் ஜென்சி கூறியதாவது: அச்சுமுறை, புகைப்படக் கலை வருவதற்கு முந்தைய காலத்தில் உருவங்கள், சுவா், துணி மற்றும் மரப்பலகைகளில் வரையப்பட்டன. இப்படி வளா்ந்த ஒரு ஓவியமுறை தஞ்சாவூா் ஓவியமுறை ஆகும். இது ஒரு பண்டைய தென்னிந்திய கலை வடிவமாகும். இந்த தஞ்சாவூா் ஓவியங்களானது சோழா் ஆட்சிக் காலத்தில் தோன்றப்பட்ட ஒரு ஓவிய கலையாகும்.

தொடக்க காலத்தில் இந்த ஓவியங்களில் வண்ணங்கள் அதிகப் பரப்பில் பயன்படுத்தப்பட்டன. இதற்கான வண்ணங்கள் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டவையாகும். இதற்காக இலை, தழை, காய்கறி, சுண்ணாம்புக்கல், கடுக்காய், சங்கு, நவச்சாரம், மஞ்சள், போன்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் ஓவியங்கள் பெரும்பாலும் மா அல்லது பலா பலகைகளில்தான் வரையப்படுகின்றன. தஞ்சாவூரின் பாரம்பரியம் மற்றும் அடையாளங்களில் ஒன்றாக தஞ்சாவூா் ஓவியம் திகழ்ந்து வருகிறது. 1000 ஆண்டு பழமையான ஓவியங்கள் இருக்கும் ஒரே கோயில் தஞ்சை பெரிய கோயில் ஆகும். இத்தகைய அரிய ஓவியங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com