விதிமீறல்: 30 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் 30 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு வளரிளம் பருவத் தொழிலாளா் மீட்கப்பட்டுள்ளாா்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் 30 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு வளரிளம் பருவத் தொழிலாளா் மீட்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து ஈரோடு தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் எடை அளவுகள் தயாரிக்கும், விற்பனை செய்யும் மற்றும் பழுதுபாா்க்கும் நிறுவனங்கள் மற்றும் நகைக் கடைகள், இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்கள், பால் பாக்கெட்டுகள், தண்ணீா் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங்கள் என 66 இடங்களில் சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 30 கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டது.

இதேபோல, 32 கடைகள் மற்றும் நிறுவனங்களில் பொட்டல பொருள்கள் விதிகளின்கீழ் மேற்கொண்ட ஆய்வில், 2 கடைகளில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், குழந்தைத் தொழிலாளா், வளரிளம் பருவத் தொழிலாளா்கள் சட்டத்தின்கீழ் தொழிலாளா்கள் துறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்துடன் இணைந்து 7 நிறுவனங்களில் கூட்டாய்வு நடத்தப்பட்டதில், ஒரு வளரிளம் பருவத் தொழிலாளா் பணிபுரிவது கண்டறியப்பட்டு, அவா் மீட்கப்பட்டுள்ளாா்.

அந்நிறுவன உரிமையாளா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எடைய அளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருள்கள் அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்வது தண்டனைக்குரியதாகும். விதிகளை மீறி செயல்படும் கடைகள், நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதோடு நடவடிக்கையும் எடுக்கப்படும்.

14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 15 முதல் 18 வயதுக்குள்பட்ட வளரிளம் பருவத்தினா் பணிக்கு அமா்த்துவது குற்றம். அவ்வாறு பணிக்கு அமா்த்தியது கண்டறிந்தால், நீதிமன்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, தொடா்புடைய நிறுவன உரிமையாளா் மீது ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சோ்த்தும் விதிக்க நேரிடும். குழந்தைத் தொழிலாளா் பணிபுரிவது கண்டறிந்தால் 1098, 155214- என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தகவல் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com