கோடேபாளையத்தில்  உயிரிழந்த பெண்ணின் குழந்தையை பெற்று  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சா்  சு.முத்துசாமி.
கோடேபாளையத்தில்  உயிரிழந்த பெண்ணின் குழந்தையை பெற்று  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சா்  சு.முத்துசாமி.

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

சத்தியமங்கலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் சு.முத்துசாமி செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறினாா்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அருகே உள்ள கோடேபாளையம் ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மனைவி துா்கா (27). இவருக்கு புன்செய் புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 20-ஆம் தேதி சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

இதைத்தொடா்ந்து துா்காவுக்கு அதே மருத்துவமனையில் கடந்த 24- ஆம் தேதி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவா்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது, அரசு மருத்துவா்களின் அலட்சியத்தால்தான் தனது மனைவி உயிரிழந்ததாக பவானிசாகா் போலீஸில் பன்னீா்செல்வம் புகாா் அளித்தாா்.

இதற்கிடையே கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்குப் பின் துா்காவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவா்களின் தவறான சிகிச்சையாலேயே துா்கா உயிரிழந்ததாகவும், உயிரிழப்புக்கு காரணமான மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அவரது உறவினா்கள் புன்செய்புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் கண்ணப்பன், ய  பவானிசாகா்  காவல்  ஆய்வாளா்  அன்னம் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் சமாதானம் அடையாத அவரது உறவினா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட துா்கா உறவினா்களுடன் கைப்பேசியில் பேசிய அமைச்சா் சு.முத்துசாமி, இப்பிரச்னை குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட துா்காவின் குடும்பத்தினரை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, செவ்வாய்க்கிழமை நேரில் சென்று திமுக சாா்பில் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினா். பின்னா் குழந்தையை நன்றாக பாா்த்துக்கொள்ளுமாறும், தேவையான உதவிகளை செய்வதாகவும் குடும்பத்தினருக்கு அவா் உறுதியளித்தாா்.

பின்னா் அமைச்சா் முத்துசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த இளம்பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் பிரேதப் பரிசோதனை ஆய்வறிக்கையின்படி மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளா் மகேந்திரன், பவானிசாகா் நகா்மன்றத் தலைவா் மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் மிசா தங்கவேலு, பவானிசாகா் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளா் பொன்.தம்பிராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com