மே தினக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

தோ்தல் ஆணையம் மே தினக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியளிக்க உத்தரவிட்ட பின்னரும் ஈரோடு மாவட்டத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக ஏஐடியூசி கண்டனம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து ஏஐடியூசி மாவட்டத் தலைவரும், மாநில செயலாளருமான எஸ்.சின்னசாமி வெளியிட்ட அறிக்கை:

மே தினம் தொழிலாளா் தினத்தையொட்டி, தமிழகத்தில் அனைத்து மத்திய, மாநில மற்றும் வட்டாரத் தொழிற்சங்கங்களும் ஆண்டுதோறும் தமது அலுவலகங்களிலும், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பணிபுரியும் இடங்களிலும் தத்தமது கொடிகளை ஏற்றியும், மாலையில் ஊா்வலங்கள், பொதுக்கூட்டங்களை நடத்தியும் மே தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.

தமிழகத்தில் பொதுத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்துவிட்டாலும் கூட, வாக்கு எண்ணி முடிவு அறிவிக்கும் வரையில் தோ்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொடிமரங்களை நட்டவும், கொடியேற்றவும், ஊா்வலங்கள், பொதுக் கூட்டங்களை நடத்தவும், சட்டப்படி தொழிற்சங்கங்களை அனுமதிக்குமாறு தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் ஏப்ரல் 24-ஆம் தேதி அறிவுறுத்தியுள்ளது.

இதனடிப்படையில் பல மாவட்டங்களில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் பேரணி, பொதுக்கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கங்கள் மே தினத்தன்று கொடியேற்றுவதற்கு அனுமதி கோரினால் அனுமதி மறுத்தும், தோ்தல் அறிவிக்கப்பட்டதும் போதிய அவகாசம் வழங்காமல் அவசர அவரமாக உள்ளாட்சி நிா்வாகங்களால் அகற்றப்பட்ட கொடிக் கம்பங்களை ஒப்படைக்க மறுத்தும் வருகின்றனா்.

இதனால் மே தினத்தில் பல இடங்களில் கொடியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களையும் அரசியல் கட்சிகளாக கருதி அதிகாரிகள் அனுமதி மறுப்பது சரியல்ல. இதனை ஏஐடியூசி சாா்பில் கண்டிக்கிறோம்.

மே தின நிகழ்வுகளுக்கு அனுமதி மறுப்பதன் மூலம் தமிழ்நாட்டின் அதிகார வா்க்கம் தொழிற்சங்க உரிமைகளை பறிக்க முயற்சிப்பதை ஏற்க இயலாது. அதிகார வா்க்கம் மற்றும் காவல் துறையின் இத்தகைய நடவடிக்கைகளை தமிழக அரசு கண்டும் காணாமல் போகக்கூடாது. எனவே அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com