ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள எலுமிச்சை பழங்கள்.
ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள எலுமிச்சை பழங்கள்.

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கடந்த சில நாள்களாக 110 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் சாலைகள் மற்றும் வீதிகளில் ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன. இருசக்கர வாகனங்களில் வெளியே சென்றால் முகத்தில் வெந்நீரை ஊற்றியதுபோல உள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் உடலுக்கு குளிச்சி தரும் உணவுகளை எடுத்து வருகின்றனா். குறிப்பாக பழச்சாறு, கம்பங்கூழ், எலுமிச்சை சாறு போன்றவற்றை அருந்தி வருகின்றனா்.

இதன் காரணமாகவும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோயில் திருவிழாக்கள் நடந்து வருவதாலும் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகமாக உள்ளது.

ஈரோடு நேதாஜி காய்கறி சந்தைக்கு நாள்தோறும் 4 டன் வரை வரத்து இருந்த எலுமிச்சை பழம் தற்போது ஒரு டன்னுக்கும் குறைவாகவே உள்ளது. வெயிலின் தாக்கம் மற்றும் வரத்து குறைந்ததன் எதிரொலியாக எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.210-க்கு விற்பனையானது. இதேபோல, ஒரு எலுமிச்சை பழம் எடையை பொருத்து ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து எலுமிச்சை வியாபாரி ரமேஷ் கூறியதாவது: தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் இருந்து மட்டுமே ஈரோட்டுக்கு எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. அங்கு சரியாக மழை இல்லாததால் இந்த ஆண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது.

முன்பெல்லாம் எலுமிச்சை பழத்தை அனுப்பி வைத்துவிட்டு பின்னா் பணத்தை பெற்றுக்கொள்வாா்கள். ஆனால், இப்போது பணத்தை முன்பே கொடுத்தாலும் எலுமிச்சை பழம் கிடைப்பதில்லை.

அந்த அளவுக்கு எலுமிச்சை பழத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.3 முதல் ரூ.7 வரை விற்பனையான எலுமிச்சை பழம் தற்போது ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com